திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் ஒரு காளைமாடு பல ஆண்டுகளாக அங்கேயே சுற்றி சுற்றி வந்தது. பக்தர்கள் அந்த காளைக்கு பழங்கள் வாங்கி கொடுத்து கவனித்து வந்தனர். அதற்கு நந்தீஸ்வரன் என்று பெயர் வைத்து பக்தர்கள் செல்லமாக அழைத்து வந்தனர். பொதுமக்களும் காளை மாட்டுக்கு பழங்கள், காய்கறி கொடுத்து காத்து வந்தனர். இந்நிலையில் அரும்பாக்கத்தில் பள்ளி மாணவி மாடு முட்டியதால் காயம் அடைந்ததையொட்டி சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி பிடித்தபோது இந்த காளை மாட்டையும் திருவொற்றியூர் மண்டல சுகாதார அதிகாரிகள் பிடித்து வாகனத்தில் ஏற்றி காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு சென்ற பிறகு காளை எதுவுமே சாப்பிடாமல் பட்டினி கிடந்துள்ளது. இதுகுறித்து அறிந்த பக்தர்கள் காளை மாட்டை மீண்டும் கோயில் பகுதியில் கொண்டுவந்துவிட வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். பிறகு காளை மாட்டை வாகனத்தில் ஏற்றிவந்து வடிவுடையம்மன் கோயில் அருகே விட்டனர். ஆனால் தொடர்ந்து காளை மிகவும் சோர்வுடன் காணப்பட்டது. பக்தர்கள் கொடுத்த பழங்கள், காய்கறிகளை சாப்பிடவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை காளை மாடு கோயிலை நோக்கி பார்த்தபடி திடீரென உயிரிழந்தது. இதை பார்த்ததும் பக்தர்கள் கண்ணீர் வடித்தனர். கோயில் வளாகத்தில் அதற்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர். சிவ பக்தர்கள் வந்து காளை மாட்டை மாட்டு வண்டியில் ஏற்றி ஊர்வலமாக எடுத்துசென்று கரிமேடு அருகே உள்ள காலி இடத்தில் கிரேன் மூலம் பள்ளம் தோண்டி புதைத்தனர்.
The post வடிவுடையம்மன் கோயிலை சுற்றிசுற்றி வந்தது மாநகராட்சி பிடித்து சென்ற காளை திடீர் இறந்தது appeared first on Dinakaran.