ஊஞ்சல், நடனமாடி குழந்தைகள், பெண்கள் உற்சாகம்; குமரியில் ஓணம் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்: பாரம்பரிய உடை அணிந்து கோயில்களில் தரிசனம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் இன்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பெருமாள் கோயில்களில் பக்தர்கள் பெருமளவில் குவிந்தனர். கேரளாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஓணம் பண்டிகை முக்கியமானதாகும். கேரளாவை ஆட்சி செய்த மகாபலி மன்னர் ஆண்டுக்கு ஒருமுறை நாட்டு மக்களை காண வருவதாக ஐதீகம் ஆகும். அவர் வருகை நினைவு கூறும் வகையில் தான் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்களை காண வரும் மகாபலி மன்னர், தனது நாட்டு மக்கள் ஏழ்மையில் இருக்கிறார்கள் என எண்ணி விட கூடாது என்பதற்காக திருவோண பண்டிகையை கேரள மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். காணம் விற்றாயினும், ஓணம் உண்ணனும் என்ற பழமொழிக்கேற்ப அனைத்து தரப்பு மக்களாலும் திருவோணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும்.

ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம் அன்று தான் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். 10 வது நாள், திருவோணத்தன்று ஓணம் கொண்டாட்டம் நடக்கும். இந்த ஆண்டுக்கான ஓணம் கொண்டாட்டம் அஸ்தம் நட்சத்திரமான கடந்த 20ம்தேதி தொடங்கியது. இன்று (29ம்தேதி) திருவோணம் கொண்டாட்டம் நடக்கிறது. கேரளாவையொட்டி உள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களிலும் ஓணம் கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெறும்.

அந்த வகையில் குமரி மாவட்டம், தாய் தமிழகத்துடன் இணைவதற்கு முன் கேரளாவை ஆண்ட திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் தான் இருந்தது. இதனால் குமரி மாவட்டத்திலும் அதிகளவில் மலையாள மொழி பேசும் மக்கள் உள்ளனர். குமரி மாவட்டம் மார்த்தாண்டம், தக்கலை, அருமனை உள்ளிட்ட பகுதிகளில் ஓணம் கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இன்று ஓண திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதிகாலையிலேயே வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டனர். பின்னர் கசவு என்று சொல்லக்கூடிய வெண்ணிற புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். குறிப்பாக பெருமாள் கோயில்களில் பெருமளவில் பக்தர்கள் குவிந்தனர்.

சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயில், நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள கிருஷ்ணசுவாமி கோயில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில், வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோயில், திங்கள்நகர் ராதாகிருஷ்ணன் கோயில், கோட்டார் ஏழகரம் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் காலையிலேயே ஆண்கள், பெண்கள் பெருமளவில் வந்து தரிசனம் செய்தனர். பெண்கள் கேரள பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர். கோயில்களில் தரிசனம் செய்த பின், வீடுகளில் ஓணம் ஊஞ்சல், ஓணப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் மூலம் மகிழ்ச்சியாக இருந்தனர். ஓணம் என்றாலே ஓணம் விருந்து முக்கியமானதாகும்.

புத்தரிசி மாவில் அடை, அடை பிரதமன், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், அவியல், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரை புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிகறி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, அப்பளம், சீடை, ஊறுகாய், பால் பாயாசம், அடை பாயாசம், சிறு பருப்பு பாயாசம் என பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களை சமைத்து குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். ஓணத்தையொட்டி குமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறையும் விடப்பட்டு இருந்தது. தோவாளை பூ மார்க்கெட்டில் நேற்று அதிகாலையில் இருந்து இன்று அதிகாலை வரை விடிய விடிய பூக்கள் விற்பனையும் நடந்தது.

The post ஊஞ்சல், நடனமாடி குழந்தைகள், பெண்கள் உற்சாகம்; குமரியில் ஓணம் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்: பாரம்பரிய உடை அணிந்து கோயில்களில் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: