பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று எஸ்ஐ பணிக்கான எழுத்து தேர்வு: 3,155 பேர் பங்கேற்பு: 158 அறைகளில் எழுத ஏற்பாடு

பெரம்பலூர்,ஆக.26: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் 3,155 பேர் பங்கேற்று எழுதுகின்றனர். 158 அறைகளில் எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு இன்று(26ம்தேதி) சனிக்கிழமை காலையில் ஆங்கிலத்திலும், மாலையில் தமிழிலும் என 2கட்டங்களாக நடைபெறு கிறது. காலையில் முதன்மை எழுத்துத் தேர்வு 10 மணிக்குத் தொடங்கி 12.30 மணி வரையும் மற்றும் இரண்டாவது எழுத்துத் தேர்வு மதியம் 3.30 மணிக்குத் தொடங்கி 5.10 மணி வரையும் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை எழுத பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 2,311 ஆண்கள், 844 பெண்கள் என மொத்தம் 3,155பேர் எழுத அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

பெரம்பலூர் -துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 6 கட்டிடங்களில் உள்ள 158 அறைகளில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வினை தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் (காவலர் நலன்) நஜ்மல் ஹோடா தலைமையில், மதுரை மண்டல (மது விலக்கு அமலாக்கப் பிரிவு) எஸ்பி சுஜித்குமார் ஆகியோர் தேர்வு நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர். தேர்வுப் பணிகளை மேற்கொள்ள 1 ஏடிஎஸ்பி, 6 டிஎஸ்பிக்கள், 15 இன்ஸ்பெக்டர்கள், 54 சப்.இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு, போலீசார் என மொத்தம் 375 பேர் நியமிக் கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களை மதுரை மண்டல (மது விலக்கு அமலாக்கப் பிரிவு) எஸ்பி சுஜித்குமார் நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று எஸ்ஐ பணிக்கான எழுத்து தேர்வு: 3,155 பேர் பங்கேற்பு: 158 அறைகளில் எழுத ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: