வேலூரில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில் அதிகாரி ஆய்வு

வேலூர் : வேலூரில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில் அதிகாரி திடீர் ஆய்வு செய்தார்.வேலூர் டோல்கேட்டில் விதை பரிசோதனை நிலையம் இயங்கி வருகிறது. இங்கு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், வியாபாரிகள் விதைகளின் தரம் குறித்து ஆய்வு செய்கின்றனர். இந்நிலையில், விதை பரிசோதனை நிலையத்தில், காஞ்சிபுரம் விதை பரிசோதனை அலுவலர் ஜெயராமன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.

அப்போது பணியாளர்களின் வருகை பதிவேடு, விதை மாதிரி வரவு பதிவேடு, முளைப்பு திறன் பதிவேடு, கணக்கெடுப்பு பதிவேடு மற்றும் இதர பதிவேடுகளை பார்வையிட்டார். விதை பரிசோதனை அறையினை பார்வையிட்டு அறையின் வெப்பநிலை மற்றும் வெளிச்சத்தின் அளவு சரியான முறையில் உள்ளதா எனவும், விதைகள் சரியான அளவில் விதைப்பு செய்யப்படுகிறதா எனவும், விதைகளின் முளைப்புத்திறன் எவ்வாறு உள்ளது மற்றும் அதன் கணக்கெடுப்பு நாட்கள் ஆகியவை சரியான முறையில் கண்காணிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்து, விவரங்களை கேட்டறிந்தார்.

விதை சேமிப்பு அறையில் வெப்பநிலை நிர்ணயிக்கப்பட்ட அளவில் பராமரிக்கப்படுகிறதா?, அழிக்கப்பட வேண்டிய விதை மாதிரிகள் உரிய காலத்தில் அழிக்கப்படுகிறதா?, அதற்கான பதிவேடு சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார்.இம்மாதம் முடிய நிர்ணயிக்கப்பட்ட இலக்கு முடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இனி வரும் காலங்களில் மீதமுள்ள இலக்கினை முடிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் வேலூர் மாவட்டத்தில் மழை பரவலாக பெய்ய ஆரம்பித்துள்ளதால் விவசாயிகள் இதனை பயன்படுத்தி நல்ல மகசூல் பெற, தரமான விதைகளை தேர்வு செய்வதற்கு விதை பரிசோதனை செய்து விதைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

சான்று விதை மாதிரிகள், ஆய்வாளர் விதை மாதிரிகள், பணிவிதை மாதிரிகள் அனைத்தும் உரிய முறையில் பகுப்பாய்வு செய்து அதன் முடிவுகளை உடனடியாக வழங்கி, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது வேலூர் விதை பரிசோதனை நிலையத்தின் மூத்த வேளாண்மை அலுவலர் லதா மற்றும் வேளாண்மை அலுவலர் சண்முகப்பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.

The post வேலூரில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில் அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: