தனியார் நிதிநிறுவன ஊழியர் பைக்கில் ₹4.50 லட்சம் அபேஸ் போலீசார் விசாரணை குடியாத்தம் அருகே

குடியாத்தம், ஆக.25: குடியாத்தம் அருகே தனியார் நிதிநிறுவன ஊழியர் பைக்கில் வைத்திருந்த ₹4.50 லட்சம் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரை சேர்ந்தவர் ராஜேஷ். குடியாத்தம் அடுத்த கொண்டசமுத்திரம் பகுதியில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் ராஜேஷ் நிதி நிறுவனத்தில் இருந்து ₹4.50 லட்சத்தை எடுத்து கொண்டு ஏடிஎம் இயந்திரம் மூலம் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்வதற்காக பைக்கில் புறப்பட்டு சென்றார்.

தொடர்ந்து, கொண்டசமுத்திரம் பகுதியில் உள்ள டீக்கடை அருகே நின்ற ராஜேஷ், பைக் பெட்ரோல் டேங்க் கவரில் பணத்தை வைத்துவிட்டு டீ குடிக்க சென்றார். பின்னர், சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கில் இருந்த பணம் திருட்டு போனது தெரியவந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் அவரை பின்தொடர்ந்து வந்து இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ் இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

The post தனியார் நிதிநிறுவன ஊழியர் பைக்கில் ₹4.50 லட்சம் அபேஸ் போலீசார் விசாரணை குடியாத்தம் அருகே appeared first on Dinakaran.

Related Stories: