பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார் மோடி: வங்கதேச பிரதமருடனும் பேச்சு

ஜோகன்னஸ்பர்க்: ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசினார்கள். தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பங்கேற்றார். நேற்று பிரதமர் மோடியும், ஜின்பிங்கும் சந்தித்து பேசினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ செய்தி எதுவும் வெளியாகவில்லை.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு நவம்பரில் பாலியில் நடந்த ஜி20 மாநாட்டின் போது ஒரு இரவு விருந்தில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சிறிது நேரம் சந்தித்தனர். இதே போல் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவையும் நேற்று பிரதமர் மோடி சந்தித்து பேசினார். தென்னாப்பிரிக்க அதிபர் ரமபோசா கொடுத்த இரவு விருந்தில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடியும், ஷேக் ஹசீனாவும் சந்தித்து உரையாடினார்கள்.

*ஆப்பிரிக்காவின் நம்பகமான கூட்டாளி இந்தியா: மோடி

பிரிக்ஸ் மாநாட்டின் கடைசி நாளான நேற்று பேசிய பிரதமர் மோடி,‘‘ தீவிரவாத எதிர்ப்பு, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, விநியோக சங்கிலிகள்,சுற்றுசூழல் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு ஆகியவை இதில் உள்ள நாடுகளின் பொதுவான குறிக்கோளாகும். 50 ஆண்டுகளுக்குள் ஆப்பிரிக்க கண்டத்தை பொருளாதார ரீதியான வளர்ச்சி அடைய செய்வதற்காக செயல் திட்டத்தை ஆப்பிரிக்க ஒன்றியம் உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தை செயலாக்கம் செய்வதற்கான பயணத்தில் ஆப்பிரிக்காவின் நம்பகமான கூட்டாளி இந்தியா ஆகும்.

ஆப்பிரிக்க நாடுகளின் திறன் மேம்பாடு மற்றும் கட்டமைப்பு வளர்ச்சிக்கு இந்தியா எப்பொழுதுமே முன்னுரிமை கொடுத்து வருகிறது. லத்தீன் அமெரிக்கா முதல் மத்திய ஆசியா, மேற்கு ஆசியாவில் இருந்து தென் கிழக்கு ஆசியா, இந்தோ பசிபிக்கில் இருந்து இந்தோ அட்லாண்டிக் என உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் ஒரே குடும்பமாக தான் இந்தியா கருதுகிறது ’’ என்றார்.

The post பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார் மோடி: வங்கதேச பிரதமருடனும் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: