வானளாவிய சாதனை

நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் விண்கலங்களை இறக்கியதில்லை. அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளே நிலவின் தென்துருவப் பகுதிக்கு விண்கலங்களை அனுப்பி தோல்வியை தழுவியுள்ளன. அந்த வகையில் வல்லரசு நாடுகளுக்கு இந்தியா தனது வல்லமையை நிரூபித்து காட்டியுள்ளது. இந்த சாதனையை இந்தியாவுக்கு உரித்தாக்கிய இஸ்ரோ விஞ்ஞானிகளை இந்திய நாடே கொண்டாடி வருகிறது. நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக சந்திரயான் – 3ஐ தரையிறக்கிய இஸ்ரோ விஞ்ஞானிகளை, உலக நாடுகள் அனைத்தும் வெகுவாக பாராட்டி வருகின்றன.

கடந்த ஜூலை 14ம் தேதி நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் – 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலமானது புவி வட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது. தொடர்ந்து சுற்றுவட்ட பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு கடந்த ஆக. 5ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. பின்னர் சந்திரயான் – 3 விண்கலத்தின் பாதை குறைக்கப்பட்டு விக்ரம் லேண்டரை பிரிக்கும் பணிகள் கடந்த 17ம் தேதி மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து நிலவை சுற்றி வர வசதியாக விக்ரம் லேண்டரின் பாதை குறைக்கப்பட்டு நிலவின் அருகில் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து நிலவின் முதல் படத்தை விக்ரம் லேண்டர் இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்தது. இதனால் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்படுமென்ற நம்பிக்கையில் இஸ்ரோ விஞ்ஞானிகள், இந்திய மக்கள் நம்பிக்கையோடு காத்திருந்தனர். நேற்று மாலை நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆர்வமுடன் களமிறங்கினர். மாலை 5.44 மணிக்கு விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான முயற்சியை தொடங்கினர்.

நேரம் நெருங்க, நெருங்க பதற்றம் அதிகரித்தது. விக்ரம் லேண்டரை தரையிறக்கும்போது, நிலவின் ஈர்ப்புவிசை மிக முக்கிய பங்கு வகித்ததால், அதற்கு ஏற்ற வகையில், லேண்டரின் வேகத்தை கட்டுப்படுத்தும் பணிகளில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டனர். மிகச்சரியாக தரையிறங்க வேண்டுமே என விஞ்ஞானிகளோடு, இந்திய மக்களும் ஆர்வமுடனும், பதற்றத்துடனும் காத்திருந்தனர். மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.

இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களது மகிழ்ச்சியை கைத்தட்டியும், ஆரவாரத்துடனும் உற்சாகமாக கொண்டாடினர். சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெருமையை வானளாவிய அளவில் உயர்த்திய விஞ்ஞானிகளை, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர். உலக தலைவர்களும் இஸ்ரோவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்தபடியே விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை பார்வையிட்ட பிரதமர் மோடி, “இது வரலாற்று சிறப்புமிக்க தருணம். மிக பெருமையாக இருக்கிறது. புதிய இந்தியாவின் விடியல் இது. இந்த தருணத்தை மறக்க முடியாது. இதற்கு முன் நடக்காதது. 140 கோடி இந்தியர்களின் துடிப்பால் இந்த அற்புத தருணம் உருவாகியுள்ளது என கூறியுள்ளார். ஏற்கனவே, சந்திரயான் -2 தோல்வியடைந்ததால், இம்முறை இஸ்ரோ விஞ்ஞானிகள் முழுமூச்சோடு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். அந்த கடின உழைப்புக்கு அற்புத வெற்றி கிடைத்திருக்கிறது. இனி உலக நாடுகளில் இந்தியா விண்ணளாவிய புகழை பெறும்.

The post வானளாவிய சாதனை appeared first on Dinakaran.

Related Stories: