வரும் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று ஜெகன் மோகன் மீண்டும் முதல்வராக பதவியேற்பார்

*சித்தூர் எம்எல்ஏ பேச்சு

சித்தூர் : வரும் தேர்தலில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக ஜெகன் மோகன் பதவியேற்பார் என சித்தூர் எம்எல்ஏ பேசினார். சித்தூரில் வீட்டுக்கு வீடு உங்கள் அரசு நிகழ்ச்சியில் எம்எல்ஏ ஜங்காப்பள்ளி சீனிவாசலு 47வது வார்டு ஓபன் பள்ளி காலனியில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் 175 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்து உடனடியாக அதனை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, சித்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஒவ்வொரு கிராமமாகவும் சென்று பொது மக்களிடையே குறைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்து வருகிறேன். தற்போது சித்தூர் மாநகரத்தில் 47வது வார்டு பகுதியில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தேன். ஏராளமான பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம், கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கோரிக்கை ஏற்கப்பட்டு விரைவில் அனைத்து பணிகளும் செய்து தரப்படும் என உறுதியளித்தேன்.

அதேபோல் ஏராளமானோர் வீட்டுமனை பட்டா, முதியார் உதவித்தொகை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் வேண்டுமென்று கோரிக்கை மனு அளித்தனர். அனைவரது கோரிக்கை மனுக்கள் மீதும் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் உன உறுதியளித்தேன். முதல்வர் ஜெகன் மோகன் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார்.

முதல்வர் ஜெகன்மோகன் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை விட அருவிக்காத பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். வரும் தேர்தலிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்று 175 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் முதல்வராக ஜெகன் மோகன் பதவியேற்பார். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் 47வது வார்டு கவுன்சிலர் ஞான ஜெகதீஷ், மாநகராட்சி மேயர் அமுதா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் புருஷோத்தம், செயலாளர் கிருஷ்ணா உள்பட ஏராளமான கட்சியினர் உடன் இருந்தனர்.

The post வரும் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று ஜெகன் மோகன் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் appeared first on Dinakaran.

Related Stories: