வில்வமும் மகாலட்சுமியும்…

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வணக்கம் நலந்தானே!

பாற்கடல் பரந்தாமனின் திருமார்பில் நிரந்தரமாக தான் உறைய வேண்டும் எனும் பேரவா கொண்டாள் மஹாலட்சுமி. அண்ட சராசரங்களின் உற்பத்தியும், ஒடுங்கியும் பரமாத்ம சொரூபமான எல்லாவற்றின் மையத்தில் தான் நித்திய வாசமிருக்க வேண்டுமென்று தவித்தாள். முப்பத்து முக்கோடி தேவர்களும் சர்வ சாதாரணமாக வந்து செல்லும் த்ரைலோகியை அடைந்தாள். திருலோக்கி எனும் இத்தலத்தில் உறையும் ஈசனான த்ரைலோக்ய சுந்தரனாக, விளங்கும் கல்யாணசுந்தரேஸ்வரரை வேண்டி அத்தலத்திலேயே அமர்ந்தாள்.

ஈசனை எவ்வாறு பூஜிப்பது என்று தவித்தாள். சட்டென்று அவளுக்குள் மின்னலாக சிந்தனைக் கீற்று வெளிப்பட்டது. தான் தனக்குள் எதை உயர்வாக நினைத்திருக்கிறோமோ, அதைத் தியாகம் செய்வதைத் தவிர வேறெந்த வழியும் இல்லை எனத் தெளிவுற்றாள். தன் உயிர் திரட்சியாக விளங்கும் பிராணனைக் கொண்டு ஈசனை வழிபட்டாள். அந்தப் பிராணன் இடகலை, பிங்கலை, சுழிமுனை என்று மூன்றாகப் பிரிந்து ஈசனை அடைந்தது. மஹாலட்சுமி மட்டிலாது மகிழ்ச்சி கொண்டாள். வேறொரு ஆச்சரியமும் அங்கே நிகழ்ந்தது. அவள் அமர்ந்த அம்மரம் துளிர்க்கத் துவங்கியது. பச்சைமா மலைபோல் மேனியனின் பச்சை நிறம் அதில் படர்ந்தது.

திருமகளிடமிருந்து வெளிப்பட்ட பேராற்றல் மிகுந்த பிராண சக்தியானது, மூவிதழாகப் பிரிந்தது. சிறு சிறு இலை வடிவம் கொண்டது. தனித்தனியாக இருந்தாலும் சிறு காம்பின் மூலம் இணைந்தது. அவளின் தவம் பெருக்கு அதில் சாரலாக வீசியது. இன்னும் தமக்குள் ஆழ்ந்து சென்றதால் வெளியே இலைகள் அதிகமாயின. கிட்டத்தட்ட அடர்ந்த கானகமாகவே பெருகின. இடையறாத அதிர்வுகளாலும், பக்தியின் வெம்மையாலும் அந்த மூவிலைகளும் மழையாக மாறி சிலிர்த்துக் கொட்டின.

அதன் வாசமும், ஈசனின் சாந்நித்தியமும் அவ்விடத்தை நிறைத்தன. விஸ்வம் எனும் பிரபஞ்சத்தையே அசைக்கும் ஈசனுக்குரியதாக அந்த இலைகள் இருந்ததால் வில்வம் எனும் பெயர் பெற்றது. ஈசனுக்குச் செய்யும் பூஜையில் ரத்னம்போல தனித்தன்மை பெற்றது. மஹாலட்சுமியின் சொரூபமாக அந்த மூவிலைகளும் விளங்கின. தொடர்ந்து தவம் புரிந்து வில்வ இலைகளால் அர்ச்சித்தாள். இன்றும் வில்வமானது மகாலட்சுமிக்கு உரித்தானதானதாகும். திருலோக்கி எனும் இத்தலத்தில் திருமகள் தவம் செய்தமையால் ஸ்ரீபுரம் என்றும் அழைக்கப்பட்டது. கும்பகோணத்திற்கு அருகேயுள்ள ஆடுதுறையிலிருந்து சூரியனார்கோயில், கஞ்சனூர் வழியாக தனிவாகனம் வைத்துக்கொண்டு செல்லலாம்.

தொகுப்பு: கிருஷ்ணா (பொறுப்பாசிரியர்)

The post வில்வமும் மகாலட்சுமியும்… appeared first on Dinakaran.

Related Stories: