குற்ற வழக்குகளில் சந்தேகப்படும் நபர்களை கண்டுபிடிப்பதற்கான முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்த தடை கோரி வழக்கு: தமிழ்நாடு அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குற்ற வழக்குகளில் சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் காண்பதற்காக, முக அடையாள தொழில்நுட்பம், கடந்த 2021 அக்டோபர் 4ம் தேதி முதல்வரால் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் முக அடையாள தொழில்நுட்பத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை அடையாறை சேர்ந்த அகிலேஷ்குமார் கந்தசாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், கடந்த 2022 மார்ச் 7ம் தேதி பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்று திரும்பிய தன்னையும், தனது சகோதரரையும் தடுத்து நிறுத்திய போலீசார் தங்களின் அனுமதியைக் கேட்காமல் புகைப்படம் எடுத்தனர். அந்த புகைப்படங்களை மாநில டேட்டா மையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இது தனது தனிப்பட்ட உரிமையில் தலையிடும் வகையில் உள்ளது. எந்த சட்டமும் நிறைவேற்றப்படாமல் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதால், முக அடையாள தொழில்நுட்பத்தை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல், சட்ட அங்கீகாரம் இல்லாமல் முக அடையாள தொழில்நுட்பம் பின்பற்றப்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு அக்டோபர் 5ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

The post குற்ற வழக்குகளில் சந்தேகப்படும் நபர்களை கண்டுபிடிப்பதற்கான முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்த தடை கோரி வழக்கு: தமிழ்நாடு அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: