74 வயதான ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் வீடியோ கால் மூலம் நிர்வாண பெண்ணை காட்டி மோசடி: பலே கில்லாடிகள் மீது போலீஸ் வழக்கு

பெங்களூரு: கர்நாடகாவில் 74 வயதுடைய ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் வீடியோ கால் மூலம் நிர்வாணப் பெண்ணை காட்டி மோசடி செய்த கும்பலை கர்நாடகா போலீசார் தேடி வருகின்றனர். கர்நாடகா மாநிலம் பெங்களூரு அடுத்த யெலஹங்கா நியூ டவுனில் வசித்து வரும் 74 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் செல்போனுக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் வந்தது. எதிர்முனையில் பேசிய பெண் ஒருவர், நிர்வாணமாக போஸ் கொடுத்து பேசினார். அதிர்ச்சியடைந்த முதியவர், அந்த பெண்ணிடம் தாங்கள் யார்? என்று கேட்டார். அந்தப் பெண் அதற்கு சரியான பதில் அளிக்காமல், வாட்ஸ்அப் வீடியோ காலை துண்டித்துவிட்டார். மூன்று நாட்களுக்குப் பிறகு, மற்றொரு செல்போன் எண்ணில் இருந்து முதியவருக்கு போன் கால் வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், தன்னை டெல்லி காவல்துறையின் சைபர் க்ரைம் போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

மேலும் அவர் கூறும்போது, ‘வாட்ஸ் அப் வீடியோ காலில், பெண் ஒருவரை நிர்வாணமாக பார்த்துள்ளீர்கள். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினார். அப்போது அந்த முதியவர், ‘நான் அந்தப் பெண்ணுக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் செய்யவில்லை’ என்றார். அதற்கு எதிர்முனையில் பதிலளித்த நபர், ‘நீங்கள் அந்தப் பெண்ணை நிர்வாணமாக பார்த்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்கள் மீது கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டும்’ என்றார். அந்த நபர் கூறியபடி, அந்த நபரின் வங்கிக் கணக்கிற்கு ரூ.34,500-ஐ ஆன்லைனில் பரிமாற்றம் செய்தார். ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும், அந்த நபர் முதியவரை செல்போனில் தொடர்பு கொண்டார். தற்போது அந்த நபர், ‘நீங்கள் நிர்வாணமாக பார்த்த அந்தப் பெண் தற்ெகாலை செய்து கொண்டார். அதனால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது’ என்றார். அதிர்ச்சியடைந்த முதியவர், தன்னை கைது செய்ய வேண்டாம் என்றும், அதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுப்பதாக உறுதியளித்தார். எதிர்முனையில் பேசிய நபர், முதியவரிடம் 4 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். இதற்கிடையே உஷாரான முதியவர், தனக்கு வந்த போல் கால் விவகாரம் குறித்து போலீசில் புகார் அளித்தார். மேலும் எதிர்முனையில் பேசிய நபரின் போன் கால் பதிவு செய்யப்பட்ட ஆடியோ விபரங்களை போலீசில் சமர்ப்பித்தார்.

இச்சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘முதியவரிடம் வாட்ஸ்அப் வீடியோ காலில் நிர்வாணமாக பெண் ஒருவர் பேசியது, உண்மையானது அல்ல. அந்த வீடியோ கால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட வீடியோவாகும். அந்த வீடியோவை போன் காலில் இணைத்து மோசடி செய்து மிரட்டி உள்ளனர். உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து செயல்படும் கும்பல்தான் இந்த மோசடியை செய்துள்ளது. முதியவரிடம் ரூ. 4 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய நபர் மீது வழக்கு பதிந்து அவரை தேடி வருகிறோம்’ என்றனர்.

The post 74 வயதான ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் வீடியோ கால் மூலம் நிர்வாண பெண்ணை காட்டி மோசடி: பலே கில்லாடிகள் மீது போலீஸ் வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: