நீட்டை திணிக்கும் ஒன்றிய அரசு-ஆளுநரை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை திமுக உண்ணாவிரத போராட்டம்: சென்னையில் அமைச்சர் உதயநிதி பங்கேற்பு

சென்னை: நீட்டை திணிக்கும் ஒன்றிய அரசு-தமிழக ஆளுநரை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை திமுக சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. சென்னையில் நடக்கும் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். ‘‘நீட் மசோதாவில் கையெழுத்து போட மாட்டேன்” என்று கூறிய ஆளுநரிடம், சேலத்தைச் சேர்ந்த அம்மாசியப்பன் ராமசாமி நேருக்கு நேர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளிக்க முடியாத ஆளுநர் அவரிடம் இருந்த மைக்கை பிடுங்கி உட்கார சொன்னார்.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் எண்ணத்தின் வெளிப்பாடாக நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. ஆனால், அந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இந்நிலையில் மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், பொறுப்பற்ற ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும், நாளை அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடக்கிறது.

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கும் போராட்டம் மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த போராட்டத்தில் திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். மேலும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாவட்டத்தை சார்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், திமுக முன்னணியினர், தொண்டர்கள், பல்வேறு மாணவர் அமைப்பை சார்ந்தவர்களும் கலந்துகொள்கின்றனர். இதேபோல மற்ற மாவட்டங்களில் நடைபெறும் உண்ணாவிரதத்தை அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தொடங்கி வைக்க உள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.

The post நீட்டை திணிக்கும் ஒன்றிய அரசு-ஆளுநரை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை திமுக உண்ணாவிரத போராட்டம்: சென்னையில் அமைச்சர் உதயநிதி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: