புற்றுநோயை பூண்டு குணப்படுத்தும் போன்ற தவறான மருத்துவக் குறிப்பு காணொளிகளை நீக்க யூடியூப் நிறுவனம் முடிவு

கலிபோர்னியா: புற்றுநோய் குறித்த தவறான மருத்துவக் குறிப்பு காணொளிகளை நீக்க யூடியூப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவத்துறை யூடியூப் தளத்தில் வெளியிடக்கூடிய மருத்துவம் சார்ந்த வீடியோக்களை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் பல தவறான சிகிச்சை முறைகள் யூடியூப் வழியாக பரவியது. இது மக்களிடம் தவறான புரிதலை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, யூடியூப் நிறுவனமும் மருத்துவம் சார்ந்த வீடியோக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த நிலையில், தற்போது புற்றுநோய்க்கு எடுத்துக்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் என்று பல தவறான வீடியோக்கள் யூடியூப்பில் பரவியுள்ளது. இதுபோன்ற விடியோக்களை நீக்குவதற்கு யூடியூப் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் மருத்துவத் தகவல் வழிகாட்டி நெறிமுறைகளின்படி ஒழுங்குபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, புற்றுநோயை பூண்டு மூலம் குணப்படுத்த முடியும், கதிரியக்க சிகிச்சைக்கு பதிலாக வைட்டமின் சி கொண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளுங்கள் என்ற தவறான சிகிச்சை முறைகள் தொடர்பான வீடியோக்கள் கண்டறியப்பட்டு, அதனை விரைவில் முழுமையாக நீக்கம் செய்யப்படும் என யுடியுப் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், மருத்துவத் துறை சார்ந்த பல்வேறு தவறான தகவல் பதிவுகளையும் நீக்குவதற்காக மருத்துவத் தகவல் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவிர, நோய்க்கான சிகிச்சை தொடர்பாக உலக சுகாதார தகவல் ஆணையத்தின் பரிந்துரைப்படி வீடியோக்கள் ஆராயப்பட்டு வருகிறது. அவற்றில் முரண்பட்ட தகவல் கொண்ட வீடியோக்களை நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மருத்துவத் துறை சார்ந்த விவாதங்கள், ஆக்கப்பூர்வமான பேச்சுக்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post புற்றுநோயை பூண்டு குணப்படுத்தும் போன்ற தவறான மருத்துவக் குறிப்பு காணொளிகளை நீக்க யூடியூப் நிறுவனம் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: