தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் வருவாய் 29 சதவீதம் உயர்வு: நெல்லை – தென்காசி பிரிவில் வேகம் அதிகரிப்பு

நெல்லை: மதுரை கோட்டத்தில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலாண்டில் வருவாய் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் காணப்படும் 6 கோட்டங்களில் வருவாய் அடிப்படையில் மதுரை கோட்டம் எப்போதுமே கூடுதல் வருவாயை ஈட்டி வருகிறது. தென்மாவட்டங்களில் பொதுமக்களுக்கு தேவையான ரயில் வசதிகள் கிடைக்காவிட்டாலும், ரயில்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை இங்கு அதிகம். குறிப்பாக தென்மாவட்டங்களில் இருந்து சென்னை, மும்பை செல்லும் ரயில்கள் வருவாயை ஈட்டி தருவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்நிலையில் மதுரை கோட்டத்தில் கடந்த ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையிலான காலாண்டு வருவாய் 29 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு(2022) ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் மதுரை கோட்டம் ஈட்டி வருவாய் ரூ.324.14 கோடியாகும். இவ்வாண்டு அதே காலக்கட்டத்தில் மதுரை கோட்டத்தின் வருவாய் ரூ.418.45 கோடியாக உயர்ந்துள்ளது. இக்காலக்கட்டத்தில் சரக்கு போக்குவரத்து 85.46 சதவீதமும், பயணிகள் போக்குவரத்து 11.94 சதவீதமும் அதிகரித்துள்ளது. மதுரை கோட்டம் காலாண்டில் 1.15 டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது கடந்தாண்டை ஒப்பிடுவகையில் 9 சதவீதம் அதிகமாகும். தேனியில் சரக்கு பதிவு அலுவலகம் விரைவில் மதுரை கோட்டம் சார்பில் திறக்கப்பட உள்ளது.

மதுரை கோட்டம் மின்மயமாக்கல் அடிப்படையிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிதியாண்டில் 442 கிலோ மீட்டர் தூரம் இதுவரை மின்மயமாக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் பகவதிபுரம் தொடங்கி கேரளா எடமன் வரையிலான 33 கிமீ தூரம் மின்மயமாக்கல் பணிகளை வரும் டிசம்பருக்குள் முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் வேகங்களை அதிகரிக்கவும் மதுரை கோட்டம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி, திருமங்கலம்-வாஞ்சி மணியாச்சி- நெல்லை பிரிவின் வேகம் 100 ல் இருந்து 110 கி.மீ ஆக உயர்த்தப்பட்டது. ஜூன் 23ம் தேதி நெல்லை-தென்காசி பிரிவில் 70 கிலோ மீட்டரில் இருந்து வேகம் 110 கிலோ மீட்டராகவும், மதுரை-ஆண்டிபட்டி-தேனி பிரிவில் 80 கிலோ மீட்டரிலிருந்து 100 கிலோ மீட்டராகவும் (74.78 கிமீ), மதுரை-திருமங்கலம் பிரிவில் 90 கிலோ மீட்டரிலிருந்து 100 கிலோ மீட்டராகவும் (17.3 கிலோ மீட்டர்) வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுரை கோட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறுமுகநேரி, கடம்பூர் தவிர திருப்பாச்சேத்தி, திருமயம், வெள்ளனூர், அய்யலூர், குமாரமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் 7 நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், பிரதமர் மோடி கடந்த வாரம் மதுரைக் கோட்டத்தில் தென்காசி, விருதுநகர் ரயில் நிலையங்கள் உட்பட, இந்திய ரயில்வேயில் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கு அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தில், நடை மேடை விஸ்தரிப்பு, கூடுதல் வாகன காப்பகங்கள், நடைமேம்பாலங்கள், லிப்ட்கள், அறிவிப்பு பலகைகள், காத்திருப்பு அறைகள், கழிப்பறைகள், தங்குமிட வசதிகள் செய்து தரப்பட உள்ளன. ரயில்வேயால் செய்து தரப்படும் புதிய வசதிகளை பயணிகள் தங்கு தடையின்றி பயன்படுத்தி கொள்ளலாம் என மதுரை கோட்டம் கேட்டு கொண்டுள்ளது.

The post தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் வருவாய் 29 சதவீதம் உயர்வு: நெல்லை – தென்காசி பிரிவில் வேகம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: