சிக்கல் பஞ்சாயத்தில் சிக்கல் 12 கவுன்சிலர்கள் ராஜினாமா: கலெக்டரிடம் கடிதம் ஒப்படைப்பு

ராமநாதபுரம்: பஞ்சாயத்து கவுன்சிலர்கள் 12 பேர், கலெக்டரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம் சிக்கல் பஞ்சாயத்தில் சிக்கல், ஆண்டிச்சிகுளம், டொட்டப்பல் சேரி, தொட்டியாப்பட்டி, கழநீர் மங்கலம், மதினார் நகர், இ.சி.ஆர் காலனி உள்பட 9 கிராமங்கள் உள்ளன. இங்கு கடந்த ஒரு வருடமாக காவிரி கூட்டுக்குடிநீர் முறையாக வழங்கவில்லை எனக் கூறி அந்த பஞ்சாயத்திலுள்ள 12 வார்டு கவுன்சிலர்கள், துணைத்தலைவர் நூருல் அமீன் தலைமையில் ராமநாதபுரத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் ராஜினாமா கடிதம் வழங்கினர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘சிக்கல் பஞ்சாயத்தில் 12 வார்டுகளில் சுமார் 13 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனர். கிராமத்திற்கு காவிரி குடிநீர் வசதி கோரி உரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் கிராம மக்கள் ஒரு குடம் குடிநீரை ரூ.10 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. குளத்து நீரை மற்ற வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தி வந்தோம். கோடை காலத்தில் அதுவும் வற்றி விட்டது. இதனால் கடும் தண்ணீர் பிரச்னை நிலவுகிறது.

எனவே நிரந்தர குடிநீர் வசதி கேட்டு உறுப்பினர்கள் 12 பேரும் ராஜினாமா செய்துள்ளோம்’’ என்றனர். பஞ்சாயத்து தலைவர் பரக்கத் ஆயிஷா கூறுகையில், ‘‘சிக்கல் பஞ்சாயத்தில் 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஒரு புதிய தொட்டி உள்ளது. ஆனால் முறையாக காவிரி கூட்டு குடிநீர் வராததால் தொட்டியில் ஏற்றி, தெருக்களுக்கு விநியோகம் செய்ய முடியவில்லை. இதனால் தட்டுப்பாடு உள்ளது. உள்ளூர் நீர் ஆதாரங்களும் உப்புத்தன்மையுடன், வறண்டு காணப்படுகிறது’’ என்றார்.

The post சிக்கல் பஞ்சாயத்தில் சிக்கல் 12 கவுன்சிலர்கள் ராஜினாமா: கலெக்டரிடம் கடிதம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: