கராச்சி: குவாடர் துறைமுக நகரில் சீன தொழிலாளர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகளை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுகம் அருகே நேற்று காலை, சீனாவைச் சேர்ந்த 23 இன்ஜினியர்கள் 7 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென 2 தீவிரவாதிகள் அந்த வாகனங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கையெறி குண்டுகளை வீசினர். தகவலறிந்த பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பதில் தாக்குதல் நடத்தினர்.
இதில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாகவும், பாதுகாப்பு படையினர் யாருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை என்றும் பாகிஸ்தான் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானுடன் இணைந்து சீனா, மிகப்பெரிய பொருட்செலவில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைத்து வருகிறது. இதற்காக சீன அரசு பலுசிஸ்தான் மாகாணத்தில் பல கோடி முதலீடு செய்துள்ளது. அங்குள்ள குவாடர் துறைமுக நகரில் ஏராளமான சீன தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சீனர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை நடத்துமாறு பாகிஸ்தான் அரசை சீன தூதரகம் வலியுறுத்தி உள்ளது.
The post 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது பாக். ராணுவம் appeared first on Dinakaran.
