சென்னை, ஆக.13: வியாசர்பாடியை சேர்ந்வர் வெங்கடேசன். இவரது மகள் விஜயலட்சுமி. இவரும், கொடுங்கையூரை சேர்ந்த ரவி (எ) சொலிசன் ரவி என்பவரும் காதலித்து, கடந்த 3 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் விஜயலட்சுமியிடம் ரவி அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார். இதனால், கடந்த 2021 ஏப்ரல் மாதம் கணவரிடம் கோபித்துக்கொண்டு 5 மாத கர்ப்பிணியான விஜயலட்சுமி தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரவி, மாமியார் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை தட்டிக்கேட்ட மாமனார் வெங்கடேசன் தலையில் கல்லால் அடித்துள்ளார்.
பின்னர், ரவி தனது மகனை தூக்கி சென்றுள்ளார். மகனை தேடிச் சென்ற விஜயலட்சுமி, பேசின் பிரிட்ஜ் அருகே ரவியிடமிருந்து குழந்தையை வாங்க முயன்றுள்ளார். அப்போது, கர்ப்பிணி மனைவியை கீழே தள்ளிய ரவி, தான் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து, அவரை குத்தியுள்ளார். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். மகளையும், பேரனையும் தேடிச்சென்ற வெங்கடேசனின் மனைவி வெண்ணிலா, அங்கு மகளை மருமகன் தாக்கியதை பார்த்து சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து, ரவி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
படுகாயமடைந்த விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இது குறித்து வெண்ணிலா கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவியை கைது செய்த புளியந்தோப்பு போலீசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு அல்லிகுளத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.எச்.பாருக் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆரத்தி ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய சாட்சிகள் மற்றும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் ரவிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
The post கர்ப்பிணி மனைவி கொலை கணவருக்கு ஆயுள் சிறை: மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.
