இந்தியாவுக்கு அதிகளவில் தக்காளி ஏற்றுமதி செய்ய நேபாள அரசு விருப்பம்

காத்மாண்டு: இந்தியாவுக்கு அதிகளவில் தக்காளி ஏற்றுமதி செய்ய நேபாள அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. நேபாள வேளாண் துறை அமைச்சர் பெதுராம் பூஷல், கடந்த மாதம் இந்தியா வந்தார். அப்போது, நேபாள வேளாண் விளை பொருள்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக ஒன்றிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமருடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இந்தியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி விநியோகம் கடுமையாக தடைப்பட்டது. தக்காளி விலை உயர்ந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இதனால் அதிகரித்து வரும் தக்காளி விலையை கட்டுப்படுத்த, நேபாளத்தில் இருந்து இறக்குமதி செய்யும் பணி தொடங்கியுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேபாள வேளாண் அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஷப்னம் சிவகோடி நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்தியாவுக்கு தக்காளியை ஏற்றுமதி செய்வதற்கான பணிகள் ஒரு வாரத்துக்கு முன்பாகவே தொடங்கி விட்டன. ஆனால், அது குறைந்த அளவிலேயே உள்ளது. இந்தியாவுக்கு தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை பெருமளவில் நீண்ட கால அளவுக்கு ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம்.

அதற்கு, அந்நாட்டு சந்தைகளை எளிதில் அணுகும் வகையில் தேவையான வசதிகளை இந்திய அரசு ஏற்படுத்தி தர வேண்டும்’ என்றார். நேபாளத்தின் காத்மாண்டு பள்ளதாக்கில் உள்ள காத்மாண்டு, லலித்பூர், பக்தபூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் தக்காளி சாகுபடி நடந்து வருகிறது. முதல் முறையாக நேபாளத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ள 10 டன் தக்காளிகள், உத்தரபிரதேச மாநிலத்தில் கிலோ ரூ.70க்கு மானிய விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக இந்திய தேசிய நுகர்வோர் கூட்டுறவு சம்மேளன (என்சிசிஎஃப்) மேலாண் இயக்குநர் ஆனீஸ் ஜோசப் சந்திரா நேற்று தெரிவித்தார்.

The post இந்தியாவுக்கு அதிகளவில் தக்காளி ஏற்றுமதி செய்ய நேபாள அரசு விருப்பம் appeared first on Dinakaran.

Related Stories: