மருத்துவ மாணவர் சேர்க்கையில் அனைத்து சுயநிதி மருத்துவ கல்லூரிகளும் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்: மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் உத்தரவு

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பு மாணவர் சேர்க்கையில் அனைத்து சுயநிதி மருத்துவ கல்லூரிகளும் சுப்ரீம் கோர்ட்டு, உயர்நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான முதற்கட்ட கலந்தாய்வில் விருப்ப இடங்களை தேர்வு செய்து, இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு நேற்று வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மருத்துவ படிப்பில் இடம்பெற்ற மாணவர்கள் கல்லூரி கல்வி கட்டணத்தை செலுத்துவதில் சிலருக்கு பிரச்சினை ஏற்பட்டதாகவும், கூடுதல் அவகாசம் கேட்டு மாணவர்கள் கோரிக்கை வைத்ததாகவும், அதன் அடிப்படையில் வருகிற 14ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணி வரை அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டு இருப்பதாகவும் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு நேற்று இரவு தெரிவித்தது.

மேலும் மருத்துவ கல்லூரிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களையும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு: 2023-2024-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் அனைத்து சுயநிதி மருத்துவ கல்லூரிகளும் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுகள் மற்றும் தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன. அனைத்து சுயநிதி கல்லூரிகளும், தேசிய மருத்துவ கவுன்சில் மற்றும் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி, தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களை சேர்க்கும்போது பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

எந்தவொரு சுயநிதி கல்லூரிகளும் 2023-2024-ம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கவுன்சிலிங்கின் எந்தவொரு சுற்றுக்கும் விண்ணப்பதாரரை அனுமதிக்க மறுத்து, கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைத்தவிர அதிக கட்டணம் வசூலித்தால், நிறுவனங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். மேலும் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஏதேனும் குறிப்பிட்ட புகார்கள் கிடைத்தால், உரிய அதிகாரிகள் மூலம் கல்லூரியின் அங்கீகாரத்தை திரும்பப் பெறுதல் அல்லது இணைப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தல் உள்பட அந்தந்த நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மருத்துவ மாணவர் சேர்க்கையில் அனைத்து சுயநிதி மருத்துவ கல்லூரிகளும் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்: மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: