பாலியல் வன்கொடுமை செய்த பிரிஜ் பூஷன் மீது வராத கோபம் ராகுலின் பறக்கும் முத்தத்திற்கு வருவது ஏன் ?: ஒன்றிய அமைச்சரை விளாசிய மகளிர் ஆணையம்

புதுடெல்லி: பாலியல் வன்கொடுமை செய்த பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது உங்களுக்கு ஏன் கோபம் வரவில்லை என ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியை டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் கடுமையாக சாடி உள்ளார். மக்களவை விவாதத்தில் ராகுல் காந்தி நேற்று பேசி முடித்ததும், ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்து பேசினார். அப்போது, ராகுல் காந்தி பேசி முடித்த பிறகு பறக்கும் முத்தம் கொடுத்ததாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.

ஸ்மிருதி இரானி பேசுகையில், ‘‘பெண் உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் நாடாளுமன்றத்தில் பறக்கும் முத்தம் கொடுக்க, பெண் விரோத எண்ணம் கொண்ட நபரால் மட்டுமே முடியும்’’ என கடுமையாக பேசினார். அதைத் தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட பாஜ பெண் எம்பிக்கள் கூட்டாக சபாநாயகரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை செய்த பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது வராத கோபம் ராகுல் காந்தி மீது வருவது ஏன் என்று ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியை டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் விளாசியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,””காற்றில் பறக்கவிடப்பட்ட ஒரு பறக்கும் முத்தம் என்பது பெரும் தீயை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனைகளை அறைக்கு அழைத்து அவர்களின் மார்பிலும், இடுப்பிலும் கைவைத்து பாலியல் வன்கொடுமை செய்த பிரிஜ் பூஷன் சரண் சிங் உங்களுக்கு 2 வரிசைக்கு பின்னால் அமர்ந்துள்ளார். அவரது செயலில் உங்களுக்கு ஏன் கோபம் வரவில்லை” என ஸ்மிருதி இரானியிடம் காட்டமாக கேட்டுள்ளார்.

பாஜக எம்பியாக உள்ள பிரிஜ் பூஷன் சரண்சிங் இந்திய மல்யுத்த சம்ளேன தலைவராக இருந்த போது, மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருப்பினும் அவர் கைது செய்யப்படவில்லை. தற்போது ஜாமீனில் அவர் உள்ளார்.

 

The post பாலியல் வன்கொடுமை செய்த பிரிஜ் பூஷன் மீது வராத கோபம் ராகுலின் பறக்கும் முத்தத்திற்கு வருவது ஏன் ?: ஒன்றிய அமைச்சரை விளாசிய மகளிர் ஆணையம் appeared first on Dinakaran.

Related Stories: