அரசு தாய்-சேய் நல மருத்துவமனையில் 6 மாதகால பயிற்சியை நிறைவு செய்த மேகாலயா மருத்துவ அலுவலர்கள்: சான்றிதழ்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை: சென்னை அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனையில் 6 மாதகால பயிற்சிகளை நிறைவு செய்த 29 மேகாலயா மருத்துவ அலுவலர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறையின் மூலம் அளிக்கப்பட்ட உயிர் காக்கும் மயக்க மருத்துவம், பேறுகால அவசர சிகிச்சை மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் ஆகிய 6 மாதகால பயிற்சிகளை நிறைவு செய்த 29 மேகாலயா மருத்துவ அலுவலர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேகாலாயா அரசு மருத்துவர்களின் பயிற்சிக்கு, தமிழ்நாடு அரசுடன் மேகாலாயா அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. உயிர் காக்கும் மயக்க மருத்துவம், பேறுகால அவசர சிகிச்சை மற்றும் அல்ட்ராசவுண்ட ஆகிய பயிற்சிகள் 29 மேகாலயா மருத்துவ அலுவலர்களுக்கு 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு நேற்று முடிவடைந்துள்ளது. லக்க்ஷயா தரச்சான்றிதழ்கள் பெற்ற, அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை, திருவல்லிக்கேணி மற்றும் அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, எழும்பூர் ஆகிய மருத்துவமனைகளில் இப்பயிற்சிகள் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் வேறொரு மாநில மருத்துவர்களுக்கு பயிற்சி அளிப்பது இதுவே முதல்முறை ஆகும். தமிழ்நாட்டை பொறுத்தவரை மற்ற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது இது தான் முதலாக இருக்கின்றது என்றார்.இந்நிகழ்வில் மேகாலயா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மேசல் அம்பரீன் லிங்டோ, மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ்மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அரசு தாய்-சேய் நல மருத்துவமனையில் 6 மாதகால பயிற்சியை நிறைவு செய்த மேகாலயா மருத்துவ அலுவலர்கள்: சான்றிதழ்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: