அடையாறு ஆற்றின் குறுக்கே சுரங்கப்பாதை தோண்டும் பணி அடுத்த மாதம் தொடங்கும்: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ரூ.63,246 கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை (3-வது வழித்தடம்) 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரை (4-வது வழித்தடம்) 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை (5-வது வழித்தடம்) 47 கி.மீ. தொலைவுக்கும் என 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. இந்த 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், சுரங்கம் தோண்டும் பணிகளுக்கு 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

மாதவரம் பால் பண்ணையில் இருந்து கடந்த பிப்ரவரி 16ம் தேதி சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கிரீன்வேஸ் சாலை மெட்ரோ ரயில் நிலையம் அருகே அடையாற்றின் குறுக்கே சுரங்கம் தோண்டும் பணிகள் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சுரங்கம் தோண்டுவதற்கான இயந்திரம் ஆற்றின் கீழ் 20 மீட்டர் சென்று 400 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையை துளைக்க தொடங்கும். காவேரி என்று பெயரிடப்பட்ட சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம், பிப்ரவரியில் ஆர்.ஏ.புரம் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தின் கீழ் சுரங்கம் அமைக்க தொடங்கியது, தற்போது ஆற்றில் இருந்து 120 மீட்டர் தொலைவில் உள்ளது.

கிரீன்வேஸ் சாலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து, துர்காபாய் தேஷ்முக் சாலையின் கீழ், திரு.வி.க பாலம் அருகே அடையாறு ஆற்றை கடந்து, அடையாறு சந்திப்பில் கட்டப்படும் ரயில் நிலையம் வரை சுரங்கப்பணி நடைபெற உள்ளது. திட்டமிடும் கட்டத்தில் ஆற்றில் உள்ள நீர் அழுத்தம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. சுரங்கப்பாதை சுவர் 35 செ.மீ. தடிமனாக இருக்கும். ஆற்றின் கீழ் அழுத்தம் அதிகமாக இருந்தால், தடிமன் 40 செ.மீ அல்லது 45 செ.மீ ஆக அதிகரிக்கலாம். சுரங்கப்பாதை துளையிடும் போது இயந்திரங்களில் நீர் புகாதபடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீருக்கு அடியில் சுரங்கம் அமைப்பது சவாலான பணியாக இருக்கும்,’’ என்றனர்.

The post அடையாறு ஆற்றின் குறுக்கே சுரங்கப்பாதை தோண்டும் பணி அடுத்த மாதம் தொடங்கும்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: