பாம்பன் புதிய பாலத்தில் நவம்பர் முதல் ரயில் சேவை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலப்பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. புதிய பாலத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் ஆர்.என்.சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது: புதிய ரயில் பாலத்தை இறுதிக்கட்டமாக ஆய்வு செய்ய, ரயில்வே பாதுகாப்பு ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிஆர்எஸ் அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் ஆய்வு செய்யவுள்ளனர்.‌ அதன்பின் ரயிலை இயக்க அனுமதி கிடைக்கும். நவம்பர் மாதம் புதிய பாலத்தில் ரயில் சேவை துவங்கப்பட்டு, மீண்டும் ராமேஸ்வரம்-மண்டபம் இடையே ரயில் பயணம் தொடரும். புதிய ரயில் பாலத்திற்கு அப்துல் கலாமின் பெயர் சூட்டுவது அரசின் முடிவை சார்ந்தது. ராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்போது பாலத்தில் டிராபிக் ஏற்பட்டால் 2வது ரயில் வழித்தடம் பொருத்தப்படும்.

பழைய ரயில் தூக்குப்பாலத்தை அகற்றுவதற்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதை காட்சிப்படுத்துவதற்காக மீண்டும் பொருத்துவது தொழில்நுட்பரீதியாக எப்படி சாத்தியம் என தெரியவில்லை. ராமநாதபுரம் – ராமேஸ்வரம் வரை ரயில்வே கூடுதல் பணிகள் மேற்கொள்ளும் நிலங்களில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் முறையாக சரி செய்யட்டுள்ளது. எந்த தடையும் இல்லை. இவ்வாறு தெரிவித்தார்.

The post பாம்பன் புதிய பாலத்தில் நவம்பர் முதல் ரயில் சேவை appeared first on Dinakaran.

Related Stories: