பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்துவதால் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தது அரசின் கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு வாதம்

சென்னை: பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்துவதால் தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தது கொள்கை முடிவு என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது. இந்த மனு தொடர்பாக ஆன்லைன் நிறுவனங்கள் ஒன்றிய அரசு தரப்பில் இருந்தும், தமிழக அரசு தரப்பில் இருந்தும் பல்வேறு மூத்த வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்து கொண்டுள்ளனர்.

அந்த அடிப்படையில் இன்று தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசலு முன்பு இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், பல்வேறு முக்கிய வாதங்களை முன்வைத்தார். அதன்படி, ரம்மி விளையாட்டை நேரில் விளையாடும் போதுதான் அதை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. ஆன்லைனில் விளையாடுவோரின் அறிவுத்திறன் சரி பார்க்கப்படுவது எப்படி? என விளக்கப்படவில்லை.

ஆன்லைனில் ரம்மி விளையாடும் போது 18 வயதிற்கு குறைவானவர்களை விளையாட அனுமதிப்பதில்லை என்று தெரிவித்திருந்தாலும், யார் விளையாடுகிறார்கள் என்ற தெளிவும், அதற்கான வழிமுறைகளும் ஆன்லைன் விளையாட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டது. ஆன்லைன் விளையாட்டில் வென்ற பணம் முழுவதையும் பெற முடியாது. ஆன்லைன் விளையாட்டில் வெற்றி பெற்றவருக்கு கிடைக்கும் பரிசுத் தொகையில் ஒரு பகுதி நிறுவனத்திற்கே செல்கிறது என்று தமிழ்நாடு அரசு வாதம் செய்தது.

இந்த ஆன்லைன் விளையாட்டுகள் குறித்து அரசு ஒழுங்குபடுத்த முடியுமே தவிர, தடை செய்ய முடியாது என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்பட்டது. பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுவதால் தான் தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அரசின் கொள்கை முடிவு என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். தொடர்ந்து அடுத்தகட்ட வாதத்திற்காக வழக்கு விசாரணையை ஆக.14ம் தேதிக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஒத்திவைத்தது.

The post பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்துவதால் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தது அரசின் கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு வாதம் appeared first on Dinakaran.

Related Stories: