தெருக்களில் கழிவுநீர் தேங்கியதால் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மக்கள் மறியலால் பரபரப்பு

பெரம்பூர்: சென்னை மாநகராட்சி 6வது மண்டலத்துக்கு உட்பட்ட 76வது வார்டு புளியந்தோப்பு, பெரம்பூர் பேரக்ஸ் சாலை கே.எம் கார்டன் சந்திப்பு அருகே மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. நேற்றிரவு பணிகள் நடைபெறும் போது அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பம்பிங் ஸ்டேஷனுக்கு செல்லும் கழிவுநீர் முழுவதும் சாலையில் தேங்கியது. இதனால் மக்கள் அவதிப்பட்டுவந்த நிலையில், தற்காலிகமாக கழிவு நீர் வெளியேறுவதைநிறுத்திவிட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில், நேற்றிரவு மீண்டும் கழிவுநீர் வெளியேறி கே.எம் கார்டன் 1வது தெரு முதல் ஐந்து தெருக்கள் முழுவதும் மற்றும் கார்ப்பரேஷன் லைன் பகுதி முழுவதும் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் மக்களும் கடும் அவதிபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த 50க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை 7 மணி அளவில், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கட்டை மற்றும் பழைய வாகனங்கள் சாலையின் குறுக்கே நிறுத்திவைத்து தடுப்புகளை ஏற்படுத்தி வாகனம் செல்லமுடியாமல் செய்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் புளியந்தோப்பு போலீசார் வந்தனர். இதன்பின்னர் அவர்கள் படாளம் மற்றும் டவுட்டன் ஆகிய இரண்டு இடங்களிலும் போக்குவரத்தை தடை செய்து பட்டாளம் பகுதி வழியாக டவுட்டன் சென்ற வாகனங்களை ஸ்டாரன்ஸ் ரோடு, பிரிக்கிளின் ரோடு வழியாக புரசைவாக்கம் செல்வதற்கு ஏற்பாடு செய்தனர். டவுட்டன் பகுதியில் இருந்து வந்த வாகனங்களை பிரிக்கிளின் ரோடு மற்றும் தானா தெரு வழியாக திருப்பி விட்டனர். இதுகுறித்து மக்கள் கூறுகையில்,’’ நேற்றிரவு 9 மணி அளவில் கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியது அப்போதே நாங்கள் இதனை சரி செய்யவேண்டும் என்று கூறினோம். ஆனால் ஊழியர்கள் தற்காலிகமாக சரி செய்துவிட்டு சென்றுவிட்டனர்.

இரவு மீண்டும் அதிக அளவு கழிவுநீர் வெளியேறி தெருக்களில் புகுந்தது. இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிக்குள்ளானோம். இதனால்தான் சாலை மறியல் ஈடுபட்டோம்’ என்றனர். இதனிடையே குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் வந்து லாரிகள் மூலம் கழிவுநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு சரிப்படுத்தினர். உடைந்த கழிவுநீர் கால்வாய் பைப்புகளை மாற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

The post தெருக்களில் கழிவுநீர் தேங்கியதால் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மக்கள் மறியலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: