குடிசைவீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது பாம்பு கடித்து 3 மாத கைக்குழந்தை பலி-ஒடுகத்தூர் அருகே சோகம்

ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த 3 மாத கைக்குழந்தை பாம்பு கடித்து நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன்(23), இவரது மனைவிசெல்வி(21). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆனநிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த செல்வி தலைபிரசவத்திற்காக ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓ.ராஜாபாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு வந்துள்ளார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு பிரனீஷ் என்று பெயர் சூட்டியுள்ளனர். பின்னர், பாட்டி வீட்டில் செல்வி மற்றும் கணவன், கைக்குழந்தையுடன் தங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு செல்வி குழந்தையுடன் குடிசை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது நாகப்பாம்பு ஒன்று குழந்தையின் கையில் சுற்றிய நிலையில் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வி பாம்பை பிடித்து தூக்கி போட்டுள்ளார். ஆனால், குழந்தையின் கையில் இரண்டு இடத்தில் பாம்பு தீண்டியதற்கான தடயம் இருந்தது தெரியவந்தது.

உடனே, கன்னியப்பன் மனைவியுடன் குழந்தையை பைக்கில் அழைத்து கொண்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அப்போது, குழந்தை இறந்த செய்தியை கேட்ட தாய் செல்வி தனது குழந்தையின் உடை, விளையாட்டு பொருட்களை கைகளில் வைத்து கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. பின்னர், குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒடுகத்தூர்அருகே பிறந்து 3 மாதமே ஆன பச்சிளம் குழந்தை பாம்பு கடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post குடிசைவீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது பாம்பு கடித்து 3 மாத கைக்குழந்தை பலி-ஒடுகத்தூர் அருகே சோகம் appeared first on Dinakaran.

Related Stories: