சென்னை, ஆக. 3: போரூர் பகுதியில் 12 இடங்களில் மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, இழப்பீட்டு தொகையாக ரூ.10.80 லட்சம் வசூலிக்கப்பட்டதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட அறிக்கை: ஜூலை 17ம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்தின் சென்னை-மையம், சென்னை-வடக்கு, சென்னை-தெற்கு, சென்னை-மேற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் சென்னை-தெற்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட போரூர் பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 12 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரூ.10,33,335 இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரச தொகை ரூ.47,500 செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யவில்லை. மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை சென்னை அமலாக்க பிரிவு செயற்பொறியாளருக்கு 94458 57591 என்ற கைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post போரூர் பகுதியில் மின் திருட்டு நுகர்வோரிடம் ₹10.80 லட்சம் வசூல்: மின்வாரியம் தகவல் appeared first on Dinakaran.
