குரலற்றவர்களுக்காக குரல் கொடுப்போம் என ஆளுநர் போஸ் பேச்சு மே.வங்க ராஜ்பவனில் ஊழல் தடுப்பு பிரிவு தொடக்கம்: மம்தா கடும் எதிர்ப்பு

கொல்கத்தா: மேற்குவங்க ஆளுநர் மாளிகையில் ஊழல் தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் ஊழல் தடுப்பு பிரிவை நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், “சாமானிய மக்கள் ஊழல் தொடர்பான புகார்களை அதுதொடர்பான திறமையான அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்போம். மக்கள் யாருக்கும், எதற்காகவும் லஞ்சம் தர வேண்டாம். லஞ்சம் கேட்பவர்களின் புகார்களை எனக்கு அனுப்பி வையுங்கள் என்று கூச்பெகாரில் முதல்வர் மம்தா கூறினார். இதை துல்லியமாக செயல்படுத்த ஆளுநர் மாளிகை முயற்சிக்கிறது. அதைத்தான் செய்ய போகிறோம்.

யாரேனும், எங்கேனும் ஊழலை கண்டால் அதுகுறித்து ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளிக்கலாம். அந்த புகார்கள் குறித்து ஆளுநர் மாளிகை உரிய அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கும்” என்று தெரிவித்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மம்தா கூறியதாவது, “ஆளுநர் மாளிகையில் ஊழல் தடுப்பு பிரிவு தொடங்கியிருப்பது மாநில அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடும் செயல். ஆளுநர் முகமூடி அணிந்து கொண்டு பாஜ தலைமையின் அறிவுறுத்தல்படி செயல்படுகிறார். மாநில உரிமைகளில் தேவையின்றி தலையிடுகிறார். ஆளுநரின் பொறுப்புகள் பற்றி அரசியல் அமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு பிரிவு திறப்பது ஆளுநர் மாளிகையின் வேலையில்லை” என்று கடுமையாக சாடியுள்ளார்.

The post குரலற்றவர்களுக்காக குரல் கொடுப்போம் என ஆளுநர் போஸ் பேச்சு மே.வங்க ராஜ்பவனில் ஊழல் தடுப்பு பிரிவு தொடக்கம்: மம்தா கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: