பள்ளிகொண்டா, ஆக.1: பள்ளிகொண்டா ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையோரம் முனிஸ்வரர் கோயில் எதிரில் பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான கைங்கர்ய நிலம் உள்ளது. இந்த நிலத்தின் மூலம் வரும் வருவாயில் ரங்கநாதர் கோயில் பிரமோற்சவத்தின்பொது ஏற்படும் செலவுகள், மண்டகபடி என பயன்படுத்தி வந்துள்ளனர். காலப்போக்கில் அந்த நிலத்தினை பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில் அவை தரிசு நிலமாக மாறியது.
இந்நிலையில், பள்ளிகொண்டா பேரூராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள், பிளாஸ்டிக்கழிவுகளை அந்த இடத்தில் கொட்டி வந்த நிலையில் நாளடைவில் அந்த குப்பைகளுக்கு சமூக விரோதிகள் தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், அருகில் உள்ள முனிஸ்வரன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், பள்ளி மாணவரகள் என பலதரப்பு மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இதனால் கோயில் நிலமும் பாழாகி வந்த நிலையில், அதனை மீட்கும் பொருட்டு மாவட்ட இந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில், அணைக்கட்டு ஒன்றிய இந்து முன்னணியினர் சார்பில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் நேற்று மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது: பள்ளிகொண்டா ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பேரூராட்சி கழிவு குப்பைகளையும், இறைச்சி கழிவுகளையும் கொட்டு எரித்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகின்றது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் கோயில் நிலமும் பாழாகி வருகின்றது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் இதில் தலையீட்டு குப்பைகளை அகற்றி தரவும், அதற்கான இழப்பீடு தொகையினை அளிக்க வேண்டும்.
மேலும், கோயில் நிலத்தில் பயிர் செய்து கோயில் ஊழியர்களுக்கும், கைங்கர்ய செலவுகளுக்கும் அதனை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர். மனுவினை பெற்றுக்கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி 7 நாட்களில் இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
The post ரங்கநாதர் கோயில் நிலத்தில் குப்பை கொட்டி எரிப்பதை தடுக்க வேண்டும் இந்து முன்னணியினர் மனு பள்ளிகொண்டா appeared first on Dinakaran.