கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அகரம் மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் ரூ.6.32 கோடியில் மூன்று தளங்களுடன் புதிதாக கட்டப்படவுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, சென்னை மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 370 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பள்ளி பை, வாட்டர் பாட்டில் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் 57 ஆசிரியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர், ஜவஹர் நகர் பகுதியில் அவரது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் சுய தொழில் புரிபவர்களுக்கான உதவிகள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், கொளத்தூர் எவர்வின் பள்ளி வளாகத்தில் இந்து சமய அறநிலைய துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 685 மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தையும் கல்வி உபகரணங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கொளத்தூர் ரெட்டேரி 200 அடி சாலையில் கொளத்தூர் ஏரியில் நீர்வள ஆதாரத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார். ரெட்டேரி 200 அடி சாலையில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நீர் பகிர்மான நிலையத்தில் ரூ.21.39 கோடி மதிப்பீட்டில் ஒரு கோடி லிட்டர் திறன் கொண்ட புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், திரு.வி.க. சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன், அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) சங்கர், கபாலீஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார் ரெட்டி, கூடுதல் ஆணையர் (கல்வி) ஹரிபிரியா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

The post கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: