தேசிய புலிகள் தினம் மங்கலம் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர், ஜூலை 30: திருப்பூர் அடுத்த மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், சர்வதேச புலிகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், மாணவிகள் புலியின் உருவம் கொண்ட முகமூடிகளை அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஷோபனா பேசியதாவது: ஒரு காட்டின் வளம் என்பது புலிகளையே குறிக்கும். உலகில் வசிக்கும் புலிகளில் 70 சதவீதம் இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் 51 புலிகள் காப்பகங்கள் உள்ளது. தமிழகத்தில் 5 புலிகள் காப்பகங்கள் உள்ளது. வங்காள புலி நமது தேசிய விலங்காக 1973ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. புலிகள் அழகான தோற்றம், வலிமை, விரைந்தோடும் இயல்பு, பேராற்றல் போன்ற சிறந்த குணங்களை உடையது. பண்டைய காலத்தில் சோழ அரசர்களின் சின்னமாக விளங்கியது. மனித வாழ்வின் அச்சாரம் சரியான பருவநிலை மாற்றமே ஆகும். காடுகள் பருவநிலை மாற்றத்தின் முக்கிய அளவீடாகும். எனவே காட்டு வளம் காக்க, புலிகள் நலம் காப்பது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து புலி பற்றிய குறும்படம் மாணவிகளுக்கு போட்டு காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post தேசிய புலிகள் தினம் மங்கலம் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: