ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம் செய்தார். மேலும், விருந்து நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்தானதால் மீனவ குடும்பங்கள் ஏமாற்றம் அடைந்தனர். ராமேஸ்வரத்தில் நேற்று முன்தினம் பாஜவின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை துவக்கி வைத்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரவில் தனியார் விடுதியில் தங்கினார். நேற்று காலை 6 மணிக்கு ராமநாத சுவாமி கோயிலுக்கு சென்றவர் ராமநாதசுவாமி – பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டார். ஒன்றிய அமைச்சர் முருகன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உடன் சென்றனர். பின்னர் அமித்ஷா ஏராகாடு கிராமத்தில் உள்ள பாஜ கட்சி நகர செயலாளர் முருகன் வீட்டிற்கு சென்று தேநீர், சிற்றுண்டி விருந்தில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அமித்ஷா நிகழ்ச்சியில் மாற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து அண்ணாமலை மட்டும் முருகன் வீட்டிற்கு சென்று தேநீர் அருந்தினார். அமித்ஷா வராததால் மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், அமித்ஷா தங்கியிருந்த தனியார் விடுதியில் கலாமின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமித்ஷா ‘கலாம் நினைவுகளுக்கு அழிவில்லை’ என்ற புத்தகத்தைவெளியிட்டார். பின்னர் அப்துல் கலாம் வீட்டிற்கு சென்று மியூசியத்தை பார்வையிட்டார். தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சென்று அமித்ஷா பயணத்தை நிறைவு செய்தார். பின்னர் மண்டபத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் சென்று விமானப்படை விமானம் மூலம் டெல்லி சென்றார்.
The post ராமேஸ்வரம் கோயிலில் அமித்ஷா தரிசனம்: விருந்து நிகழ்ச்சி ரத்தால் மீனவ குடும்பங்கள் ஏமாற்றம் appeared first on Dinakaran.