உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து யூ டியூப் சேனல் ஒன்றில் அவதூறாக பேசியதாக பத்ரி சேஷாத்ரி கைது

சென்னை : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து யூ டியூப் சேனல் ஒன்றில் அவதூறாக பேசியதாக பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டுள்ளார். கும்பகோணத்தில் பிறந்தவர் பத்ரி சேஷாத்ரி. எழுத்தாளர், சமூக ஆர்வலரான இவர் நாட்டில் நிலவும் முக்கிய பிரச்னைகள் குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவிப்பார். சமீபத்தில் மணிப்பூர் வன்முறை, மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்தும் யூ டியூப் சேனல் ஒன்றில் கடுமையாக விமர்சித்திருந்தார்.அந்தப் பேட்டியில் அவர், ‘மணிப்பூர் கொலை நடக்கத்தான் செய்யும், தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம்’ என்று பேசியுள்ளார்.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்கறிஞர் ஒருவர் பெரம்பலூர் மாவட்ட குன்னம் காவல்துறையில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரை ஏற்ற பெரம்பலூர் காவல்துறையினர் அவரை இன்று காலை மயிலாப்பூரில் அவரது வீட்டில் வைத்து கைது செய்தது. மேலும், பத்ரி சேஷாத்ரி மீது குன்னம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன் படி, 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டுவது), 153 ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகையை வளர்ப்பது, மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்தல்) , 505 (பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அறிக்கைகள்) ஆகியவை முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து யூ டியூப் சேனல் ஒன்றில் அவதூறாக பேசியதாக பத்ரி சேஷாத்ரி கைது appeared first on Dinakaran.

Related Stories: