திருமலை: ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்எல்ஏ அஞ்சனேயலு மீது பொய் வழக்கு போடப்பட்டு இருப்பதாகவும் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெலுங்கு தேசம் கட்சியினர் பேரணி மேற்கொண்டனர். இந்த பேரணி வினுகொண்டா பஸ் நிலையம் அருகே வந்தபோது அவ்வழியாக ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ பிரம்மா நாயுடு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எம்எல்ஏ காரை தெலுங்கு தேசம் கட்சியினர் முற்றுகையிட்டு குவாரி முறைகேட்டில் அவர் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் அங்கு திரண்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கற்கள், கட்டைகளால் தாக்கி கொண்டனர். இதில் எம்எல்ஏ கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
நிலைமையை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். இரு தரப்பினரும் கல் வீசித் தாக்கியதில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து வேறு இடங்களில் பிரச்னை ஏற்படாமல் இருக்க இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது.
The post எம்எல்ஏ கார் கண்ணாடி உடைப்பு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்- தெலுங்கு தேசம் பயங்கர மோதல்: போலீஸ் துப்பாக்கிச் சூடு appeared first on Dinakaran.
