“தேவைப்பட்டால் இந்தியா எல்லை தாண்டும்’’ராஜ்நாத் சிங் சர்ச்சை பேச்சுக்கு பாக். கண்டனம்

இஸ்லாமாபாத்: “தேவைப்பட்டால் இந்தியா எல்லை தாண்டும்” என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் டிராஸ் பகுதியில் நடந்த கார்கில் வெற்றி தினத்தின் 24வது ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை. மரியாதை மற்றும் கண்ணியத்தை காப்பாற்ற, எல்லை கட்டுப்பாட்டு கோடு உள்பட இந்தியா எந்த எல்லையையும் தாண்டும்.

தூண்டிவிட்டால், தேவை ஏற்பட்டால் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடக்கவும் இந்தியா தயங்காது,” என்று பேசியிருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலளித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `இந்தியாவின் போர் குணமிக்க இந்த பேச்சு பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக உள்ளதால், இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறோம். எந்தவொரு அத்துமீறலையும் எதிர்த்து பாதுகாத்து கொள்ளும் முழுத்திறமை பாகிஸ்தானுக்கு இருக்கிறது,’’ என்று கூறப்பட்டுள்ளது.

The post “தேவைப்பட்டால் இந்தியா எல்லை தாண்டும்’’ராஜ்நாத் சிங் சர்ச்சை பேச்சுக்கு பாக். கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: