கார்கில் போரின் 24வது வெற்றி தின கொண்டாட்டம்; சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து ராணுவத்தினர் மரியாதை..!!

சென்னை: கார்கில் போரின் 24வது வெற்றி தினத்தை முன்னிட்டு சென்னை போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து ராணுவத்தினர் மரியாதை செலுத்தி வருகிறார்கள். இந்திய ராணுவம் கார்கில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் இந்தியப் பகுதியில் ஒருமலை உச்சியில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்த பாகிஸ்தான் படைகளை வெற்றிகரமாக அகற்றியது. மைனஸ் டிகிரி குளிர் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு போரிட்ட இந்திய ராணுவ வீரர்கள், சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினரையும், பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்று கார்கில் பகுதியில் வெற்றிக்கொடி நாட்டினர்.

நாட்டை காக்க நடந்த இந்த போரில் எதிர்பாராத விதமாக 500க்கும் அதிகமான இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த வெற்றியை கொண்டாடவும், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையிலும், இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி கார்கில் போரின் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. ஆபரேஷன் விஜய் என்றும் அறியப்படுகின்ற கார்கில் போரில் இந்திய ராணுவ தளபதிகள் மற்றும் வீரர்களின் துணிவும், தியாகமும் ஒப்பற்றதாக விளங்குகிறது. இந்நிலையில், கார்கில் போரின் 24வது வெற்றி தினத்தை ஒட்டி சென்னை போர் நினைவு சின்னத்தில் தரைப்படை, கப்பற்படை, விமானப்படை என முப்படையை சேர்ந்த அதிகாரிகள் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதேபோல கார்கிலில் பங்கேற்று தற்போது இந்த நிகழ்வில் பங்கேற்க வந்திருக்கும் வீரர்களுக்கும் மரியாதை செலுத்தும் நிகழ்வானது நடைபெற்று கொண்டிருக்கிறது. முக்கியமாக லெப்டினென்ட் ஜென்ரல் கரம்பீர் சிங் தலைமையில் ராணுவ உயர் அதிகாரிகள் தற்போது போர் நினைவு சின்னத்தில் ஒவ்வொருவராக மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதேபோல் லடாக்கின் ட்ராஸ் பகுதியில் அமைந்துள்ள கார்கில் நினைவிடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். ஓய்வு பெற்ற மற்றும் பணியாற்றும் ராணுவ வீரர்கள் தங்கள் வீர வணக்கத்தை செலுத்தித் செல்வர்.

The post கார்கில் போரின் 24வது வெற்றி தின கொண்டாட்டம்; சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து ராணுவத்தினர் மரியாதை..!! appeared first on Dinakaran.

Related Stories: