பரதராமி சோதனைச்சாவடியில் டிஐஜி திடீர் ஆய்வு தமிழக- ஆந்திர எல்லையில்

குடியாத்தம், ஜூலை 26: தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள பரதராமி சோதனைச்சாவடியில் வேலூர் சரக டிஐஜி முத்துசாமி நேற்று திடீர் ஆய்வு செய்தார். தமிழக- ஆந்திர எல்லையில், குடியாத்தம் அடுத்த பரதராமியில் சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி வழியாக மாடுகள், ஆடுகள், காய்கறிகள், ராட்சத பாறை கற்கள் உள்ளிட்டவை கனரக லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. சில நேரங்களில் வாகனங்களில் கஞ்சா, அரசு மதுபாட்டில்களும் கடத்தப்படுகிறது. எனவே, குடியாத்தம் சப்-டிவிஷன் போலீசார் பகல், இரவு என 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு, கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று வேலூர் சரக டிஐஜி முத்துசாமி பரதராமி சோதனைச்சாவடியில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது, வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட அறிவுறுத்தினார். பின்னர், அவ்வழியாக வந்த கார்களில் சோதனை செய்தார். இதையடுத்து, தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கும், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கும் பரதராமி வழியாக நாள்தோறும் எத்தனை வாகனங்கள் செல்கிறது, என்னென்ன கொண்டு செல்லப்படுகிறது போன்ற விவரங்களை குறித்து டிஎஸ்பி ராமமூர்த்தியிடம் டிஐஜி கேட்டறிந்தார். பின்னர், அவ்வழியாக செல்லும் வாகனங்களின் பதிவு எண்ணை கண்காணித்து எழுதி வைக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, பரதராமி போலீஸ் நிலையத்தில் டிஐஜி முத்துசாமி ஆய்வு செய்து, காவல் நிலையத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார்.

The post பரதராமி சோதனைச்சாவடியில் டிஐஜி திடீர் ஆய்வு தமிழக- ஆந்திர எல்லையில் appeared first on Dinakaran.

Related Stories: