பொதுப்பணித்துறை சார்பில் ரூ.17 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் ராஜாஜி ஹால்

சென்னை: சென்னையில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ராஜாஜி ஹாலை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் ரூ.17 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. சென்னை அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள ராஜாஜி ஹால் துக்கம், சந்தோஷம், கண்ணீர், சோகம், ஆனந்தம் என பல உணர்வுகளை தாங்கி நிற்கிறது. இந்த இடத்தில்தான் தமிழகத்தின் முக்கிய தலைவர்களான எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் இறுதி அஞ்சலி நடைபெற்றுள்ளது. பல திரைப்பட படப்பிடிப்புகள் தொடங்கி கூட்டங்கள், பொது விழாக்கள், கண்காட்சிகள் வரை அரங்கேறியது. 220 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடம் விருந்து மண்டபம் என்றும் அழைக்கப்பட்டது. மைசூர் அரசனான திப்பு சுல்தானுக்கு எதிரான ஆங்கிலேயர்களின் வெற்றியை நினைவுகூரும் வகையில் பொறியாளர் ஜான் கோல்டிங்ஹாமால் இந்த மண்டபத்தை கட்டியுள்ளார்.

எட்வர்ட் கிளைவ் பிரபுவின் ஆட்சி காலமான 1802ல் கட்டுமான பணி முடிந்தது. அரசு விழாக்கள் மற்றும் விருந்துகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த செவ்வக வடிவ மண்டபம் 1800களின் பிற்பகுதியில் மாற்றப்பட்டது. முழு கட்டிடமும் சுண்ணாம்பு சாந்தில் செங்கற்கள் மூலம் கட்டப்படது. இந்திய விடுதலைக்கு முன்பு ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில் சட்டமன்ற கூட்டங்கள் இந்த அரங்கிலேயே நடத்தப்பட்டன. அதன் நினைவாக ராஜாஜி காலத்துக்கு பின் இந்த இடத்துக்கு ராஜாஜி அரங்கம் என பெயர் மாற்றப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தின் பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாத்து புனரமைப்பு செய்யும் பொருட்டு, கண்காணிப்பு பொறியாளர் கல்யாண சுந்தரம் தலைமையில் பொறியாளகள் குழுவினர்அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். அதன்படி, 2022-23ம் நிதியாண்டின் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையின் போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, 17 பாரம்பரிய கட்டிடங்கள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி 17 கட்டிடங்களை பழமை மாறாமல் சீரமைக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்த பணிகளை தமிழக பொதுப்பணித்துறை தொடங்கியது. அதன்படி, ராஜாஜி ஹாலை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி ரூ.17 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கூறுகையில், ‘‘ராஜாஜி ஹால் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பதால் அதன் அமைப்பு மாறாமல் புதுப்பிக்க உள்ளோம். சாதாரணமான சிமென்ட் இல்லாமல் பழமையான முறைப்படியே மறுசீரமைக்கப்பட உள்ளது. அதாவது, ராஜாஜி ஹால் கட்டப்பட்டபோது பின்பற்றப்பட்ட அதே கட்டிடக் கலை பாணியில் மீண்டும் புனரமைப்பு பணிகள் தொடங்கப்படுகிறது.

குறிப்பாக சாதாரணமான சுண்ணாம்பு பூச்சு இல்லாமல் பழமை வாய்ந்த தீர்வை பூச்சு முறையே பயன்படுத்தப்படும். சுண்ணாம்பு கலவையுடன் கடுக்காய், வெல்லம், நாட்டுக் கோழி முட்டை, கற்றாழை ஆகியவை கலந்து சுமார் 15 நாட்கள் ஊறவைக்கப்படுகிறது. இதுபோன்று தயாரிக்கப்படும் சுண்ணாம்பு கலவை, 100 சதவீதம் தரமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும். இந்த பூச்சு முறை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 18 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

The post பொதுப்பணித்துறை சார்பில் ரூ.17 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் ராஜாஜி ஹால் appeared first on Dinakaran.

Related Stories: