அண்ணாமலை நடைபயண தொடக்க விழா ஓ.பன்னீர்செல்வத்தை முற்றிலும் புறக்கணித்த பாஜ தலைமை: தேமுதிகவுக்கு திடீர் அழைப்பு?

சென்னை: அண்ணாமலை நடைப்பயண தொடக்க விழாவுக்கு, பெரிதும் நம்பியிருந்த ஓபிஎஸ், டிடிவி தினகரனை முற்றிலும் பாஜ தலைமை புறக்கணித்துவிட்டது. இந்நிலையில், டெல்லி கூட்டத்துக்கு அழைப்பு இல்லாத தேமுதிகவுக்கு, நடைப்பயண தொடக்க விழாவுக்கு திடீர் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜ 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் இரண்டு தேர்தலிலும் எதிர்பார்த்த வெற்றி இரண்டு கட்சிகளுக்கும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக பாஜ கூட்டணி தொடரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக2 கட்சிகளும் சேர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் பாஜ தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டது. அதிமுக உடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை கட்சி மேலிடம் எடுத்தால், தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை பேசியதாக வெளியான தகவல் அதிமுகவினரிடையே புயலை கிளப்பியது.

அடுத்ததாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசிய கருத்து அதிமுகவினரை கொந்தளிக்க செய்தது. இதன் காரணமாக அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்ணாமலையின் நடவடிக்கையால் பாஜ – அதிமுக கூட்டணிகளுக்கு இடையே சலசலப்பை உண்டாக்கியது. தற்போது கட்சிகளுக்கு இடையேயான மோதல் குறைந்து அண்ணாமலை- எடப்பாடி பழனிசாமிக்கு இடையிலான மோதலாக உருவெடுத்தது.

இந்த சூழ்நிலையிலும், இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி நீடிப்பதாக அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் அறிவித்தனர். ஆனாலும், அதிமுக 4 ஆக பிரிந்து கிடப்பதால் தேர்தலில் வெற்றி பெறுவது சுலபம் அல்ல என டெல்லி பாஜ தலைமை கருதுகிறது. எனவே எடப்பாடி பழனிசாமியிடம், ஓபிஎஸ் மற்றும் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை இணைக்க வேண்டும் என்று அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. மேலும் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் ஓபிஎஸ்சை புறக்கணிக்க டெல்லி தலைமை முடிவெடுத்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கூட்டணி கட்சி தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தை டெல்லியில் பாஜ தலைமை கூட்டியது. இதில், எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அழைப்பு விடுத்தது. இதனால் ஓபிஎஸ் கடும் அதிருப்திக்குள்ளானார். பாஜ தன்னை கழற்றி விட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 3வது அணியை உருவாக்குவது குறித்து சிறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வரும் 28ம் தேதி முதல் ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

ராமேஸ்வரத்தில் வரும் 28ம் தேதி நடைப்பயணத்தை பாஜ மூத்த தலைவரும், ஒன்றிய அமைச்சருமான அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். நடைப்பயணம் தொடக்க விழாவில் கலந்து கொள்ளும்படி பாஜ தனது கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன், ஏ.கே.மூர்த்தி, ஜான் பாண்டியன், தேவநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். எனவே ராமேஸ்வரத்தில் தொடங்கவுள்ள நடைப்பயணத்தில் இந்த தலைவர்களும் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கை அண்ணாமலை கடைபிடித்து வருவதால் அவர் இந்த நடைப்பயணத்தில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஆனால், பாஜ மூத்த தலைவர் அமித்ஷா கலந்து கொள்வதால் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த தேர்தலில் கூட்டணி கட்சியில் இருந்த தேமுதிகவுக்கு டெல்லியில் நடந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனால் பிரேமலதா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் நடைப்பயண தொடக்க விழாவுக்கு தேமுதிகவுக்கு பாஜ தலைமை அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பாஜவை மிகவும் நம்பியிருந்த ஓபிஎஸ், டிடிவி தினகரனை முற்றிலும் பாஜ தலைமை புறக்கணித்திருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாஜவை மிகவும் நம்பியிருந்த ஓபிஎஸ், டிடிவி தினகரனை முற்றிலும் பாஜ தலைமை புறக்கணித்திருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

The post அண்ணாமலை நடைபயண தொடக்க விழா ஓ.பன்னீர்செல்வத்தை முற்றிலும் புறக்கணித்த பாஜ தலைமை: தேமுதிகவுக்கு திடீர் அழைப்பு? appeared first on Dinakaran.

Related Stories: