தாண்டிக்குடி மலைச்சாலையில் விபத்தை தடுக்க ஆபத்தான வளைவுகளில் குவிலென்ஸ் பொருத்த வேண்டும்: வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

பட்டிவீரன்பட்டி: தாண்டிக்குடி மலைப்பகுதியில் விபத்தை தடுக்க முக்கிய சாலை வளைவுகளில் குவிலென்ஸ் பொருத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மற்றும் வத்தலக்குண்டு போன்ற நகரங்களிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, மங்களங்கொம்பு, தாண்டிக்குடி, பண்ணைக்காடு வழியாக கொடைக்கானல், கும்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது மாநில நெடுஞ்சாலைக்கு உட்பட்ட சாலையாகும். இந்த மலைப்பாதையில் பல இடங்களில் கொண்டை ஊசி வளைவுகளும், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு ஆபத்தான வளைவுகளும் உள்ளன. இதனால் மலைச்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரிவதில்லை.

இதன் காரணமாக இம்மலைச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதிவேகமாக வளைவுகளில் திரும்பும் போது வாகனங்கள் வருவதை தெரிந்து கொள்ள முடியாததால், விபத்தில் சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. எனவே இம்மலைப்பகுதியில் விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் ஆபத்தான வளைவுகளில் குவிலென்ஸ் கண்ணாடி (கான்வெக்ஸ் மிர்ரர்) பொருத்த வேண்டும் என மாநில நெடுஞ்சாலைத் துறையினருக்கு வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு குவிலென்ஸ்களை நிறுவினால், விபத்து குறைவது மட்டுமின்றி வளைவுகள் மற்றும் திருப்பங்களில் வாகனங்கள் வருவதை எளிதில் காணமுடியும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

The post தாண்டிக்குடி மலைச்சாலையில் விபத்தை தடுக்க ஆபத்தான வளைவுகளில் குவிலென்ஸ் பொருத்த வேண்டும்: வாகன ஓட்டிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: