சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பள்ளி மாணவர்களின் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்..!!

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பள்ளி மாணவர்களின் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சாலை விபத்துக்கள் கவலைக்குரிய ஒரு பெரிய காரணம். 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு 573 ஆக இருந்த சாலை விபத்துகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 508 ஆகக் குறைந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 241 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. சென்னை பெருநகர போக்குவரத்து காவல் விதிகள் மற்றும் கடுமையான அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் முன்முயற்சிகள் காரணமாக கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இருந்தபோதிலும், சாலைகளில் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அரசுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த கவலையளிக்கிறது.

அரசின் தெளிவான வழிகாட்டுதலைப் பின்பற்றி, விபத்துகளைத் தடுக்கும் வகையில் சாலை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான வாகனம் ஓட்டும் நடைமுறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, போக்குவரத்து வார்டன்களுடன் (Traffic Warden) ஒருங்கிணைந்து இன்று வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகம் அருகே உள்ள ஈ.வே.ரா சாலையில், சாலைப் பயனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்திப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்து, வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கினார்.

பின்னர் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டு, கையெழுத்து முகாமினை துவக்கி வைத்தார். மேலும், சாலை சந்திப்பில் சாலைப் பயணிகளிடம் விபத்துகளை தவிர்க்க போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பள்ளி மாணவர்களின் பங்களிப்பை பாராட்டி சான்றிதழ்களையும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கினார். போக்குவரத்து பாதுகாப்பு பயிற்சி பெற்ற சுமார் 120 பள்ளி மாணவர்கள் நகரின் பல்வேறு பள்ளிகளில் இருந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தலைகவசம் அணிதல், சீட் பெல்ட் பயன்படுத்தல், வாகனம் ஓட்டும் போது செல்போனை பயன்படுத்துவதை தவிர்த்தல் மற்றும் நிறுத்தல் கோட்டிற்கு கீழ்ப்படிவது போன்றவற்றை சிக்னல் சந்திப்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர் கபில்குமார் சி சரட்கர், இ.கா.ப., போக்குவரத்து காவல் இணை ஆணையாளர் என்.எம்.மயில்வாகனன், இ.கா.ப, மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி மாணவர்களை பயன்படுத்தி சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஒரு வாரத்திற்கு உழைப்பாளர் சிலை சந்திப்பு, லஸ் சந்திப்பு, அண்ணாநகர் ரவுண்டானா, சென்ட்ரல் லைட் பாயின்ட் சந்திப்பு மற்றும் நந்தனம் சந்திப்பு ஆகிய இடங்களில் குழந்தைகள் விழிப்புணர்வு பிரசாரம் செய்வார்கள்.வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கு போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பள்ளி மாணவர்களின் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்..!! appeared first on Dinakaran.

Related Stories: