மணலி கழிவுநீரேற்று நிலையத்தில் லாரிகளில் இருந்து விடப்படும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவொற்றியூர்: மணலி மண்டலம், 19வது வார்டுக்குட்பட்ட மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறக் கூடிய கழிவுநீர் பாதாள சாக்கடை குழாய் வழியாக 3வது பிரதான சாலையில் இருக்கும் கழிவு நீரேற்று நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து பல்ஜிபாளையம் அருகே உள்ள பிரதான கழிவுநீர் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. இந்தநிலையில் பாதாள சாக்கடை வசதி இல்லாத இடங்களில் வீடுகளில் கீழ்நிலை தொட்டியில் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு, தொட்டி நிறைந்ததும் மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட கழிவுநீர் லாரிகள் மூலம் இந்த கழிவுநீர் உறிஞ்சப்படுகிறது.

பின்னர் எம்எம்டிஏ 3வது பிரதான சாலையில் உள்ள கழிவு நீரேற்று நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு லாரி மூலம் நீரேற்று நிலையத்தில் கழிவு நீரை ஊற்றுவதால் சுற்றுவட்டாரத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதாகவும், இதனை தடை செய்ய வேண்டும் எனவும் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கழிவுநீர் அகற்று மற்றும் குடிநீர் வழங்கல் வாரிய தலைமை அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து மணலி மண்டல குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘வீடுகளில் இருந்து லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் கழிவுநீர் 3வது பிரதான சாலையில் உள்ள கழிவுநீர் நிலையத்திற்கு கொண்டுவராமல் பல்ஜிபாளையத்தில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நேரடியாக கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். அதற்கான அனுமதி கிடைத்தவுடன் இங்கு லாரிகளில் கொண்டு வரப்படுவது முற்றிலுமாக தடை செய்யப்படும்,’’ என்றனர்.

The post மணலி கழிவுநீரேற்று நிலையத்தில் லாரிகளில் இருந்து விடப்படும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: