ஞானவாபி மசூதியில் ஜூலை 26 வரை தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஞானவாபி மசூதியில் ஜூலை 26ம் தேதி வரை தொல்லியல் துறை அகழாய்வு கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அங்குள்ள குளத்தில் சிவலிங்கம் இருப்பதாவும், எனவே இப்பகுதியில் இந்தியத் தொல்லியல்துறை அறிவியல் பூர்வமான கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு இந்து அமைப்புகள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணை கடந்த 14ம் தேதி முடிவடைந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் மேற்கண்ட வழக்கில் வாரணாசி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மசூதி வளாகத்தில் அறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்தவும், ஆகஸ்ட் 4ம் தேதிக்குள் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கவும், இந்தியத் தொல்லியல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும், மசூதியில் சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்பட்ட பகுதியை ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’ என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதால், அந்த பகுதியைத் தவிர்த்துவிட்டு மற்ற பகுதிகளில் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மாவட்ட நீதிமன்ற உத்தரவின்படி, ஞானவாபி மசூதி வளாகத்தை இன்று இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ள வந்தனர். அதனால் அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இதற்கிடையில் தி அஞ்சுமான் இன்டேஸமியா மஸ்ஜித் குழு ஆய்வில் பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக அதன் இணைச் செயலாளர் எஸ்எம் யாசின் கூறுகையில், ‘நாங்கள் தொல்லியல் துறை ஆய்வைப் புறக்கணிக்கின்றோம். நாங்களோ அல்லது எங்கள் தரப்பு வழக்கறிஞர்களோ இந்த ஆய்வில் பங்கேற்கப் போவதில்லை’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தொல்லியல் துறையின் ஆய்வை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘இந்திய தொல்லியல் துறை குழுவினர், ஞானவாபி மசூதி வளாகத்தில் வரும் 26ம் தேதி வரை எவ்வித ஆய்வும் நடத்தக்கூடாது. இவ்விசயத்தில் மனுதாரர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்’ என்று உத்தரவிட்டது.

The post ஞானவாபி மசூதியில் ஜூலை 26 வரை தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: