10 வீல்களுக்கு மேல், 28 டன்களுக்கு மேல் அனுமதி இல்லை கனிம வளங்கள் கொண்டு செல்ல வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு: அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி

நாகர்கோவில்: கனிம வளங்களை கொண்டு செல்ல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் நேற்று அளித்த பேட்டி: கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதல்வர் போக்குவரத்து ஆணையர் மூலமாக ஒரு செயல்முறை ஆணையை பிறப்பித்துள்ளார். அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிம வளங்கள் ஏற்றிச்செல்கின்ற வாகனங்களை ஒழுங்குபடுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 10 வீல்களுக்கு மேற்பட்ட வாகனங்களில் கனிம வளங்கள் ஏற்றிச்செல்லக்கூடாது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் அவற்றை இரண்டு வழிகள் வாயிலாகத்தான் கொண்டு செல்ல முடியும். 28 டன் எடைக்கு மேல் பாரம் ஏற்றக்கூடாது என்றும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஓவர் லோடுடன் செல்வதை கட்டுப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமையும். இரண்டு வழிகள் என்பது ஒன்று ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், துவரங்காடு, களியங்காடு வந்து மெயின் ரோடு வழியாக செல்ல முடியும். அதுபோன்று மற்றொரு வழித்தடம் காவல்கிணறு, ஆரல்வாய்மொழி, தோவாளை, வெள்ளமடம், அப்டா மால், புத்தேரி, இறச்சகுளம், களியங்காடு வந்து மெயின் ரோடு வழியாக செல்ல வேண்டும்.

டவுன் ரோடுகள் மட்டுமல்ல, சிறிய சாலைகளில் செல்லக்கூடாது. அடுத்தகட்டமாக மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி சேர்ந்து கனிம உரிமையாளர்கள், லாரி ஆபரேட்டர்களிடம் உடனடியாக உரிய உத்தரவுகள் பிறப்பிக்க உள்ளார்கள். உத்தரவு பிறப்பித்ததும் முழுவீச்சில் இது நடைமுறைப்படுத்தப்படும். இந்த செயல்முறைகள் நடைமுறைக்கு வரும்போது சட்டப்படியாக வாகனங்களை பறிமுதல் செய்ய முடியும். ஏற்கனவே 7 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

10 வீலுக்கு மேல் வண்டிகள் அனுமதிக்கப்பட மாட்டாது. ஆகஸ்ட் 1 முதல் இது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும். நீதிமன்றத்திற்கு சென்றாலும் சந்திக்க தயாராக உள்ளோம். பொதுமக்கள் மத்தியில் இது வரவேற்பை பெறும். மாவட்ட எல்லை பகுதிகளில் ஏற்கனவே சோதனை சாவடிகள் உள்ளன. அங்கே கண்காணிக்கப்படும். மாவட்டத்தில் இதனை நடைமுறைப்படுத்துவதால் மாவட்டத்தில் உள்ளூரில் கனிம வளங்கள் எளிதாக கிடைக்கும். மாவட்ட நலனுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். கனிமங்கள் வரத்து குறையாது, விலை உயராது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post 10 வீல்களுக்கு மேல், 28 டன்களுக்கு மேல் அனுமதி இல்லை கனிம வளங்கள் கொண்டு செல்ல வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு: அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: