மணிப்பூரில் கொடூரம் மேலும் 7 பேர் கூட்டு பலாத்காரம்: இரண்டு பெண்கள் எரித்துக் கொலை அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்

இம்பால்: மணிப்பூர் வன்முறையில் 27 பெண்கள் மிகக் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் எரித்தும், 5 பேர் துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டிருப்பதாக அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே அண்டை மாநிலமான மிசோரமிலும் வன்முறை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்டீஸ் இனத்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியால் கடந்த மே 3ம் தேதி கடும் வன்முறை ஏற்பட்டது. 82 நாட்களாகியும் இந்த வன்முறை இன்னும் அடங்கவில்லை.

மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி பழங்குடியினத்தவர்கள் அடித்து விரட்டப்படுகின்றனர். அங்கு 2 பழங்குடியின பெண்கள் நிர்வாண நிலையில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ நாட்டையே உலுக்கி உள்ளது. இந்நிலையில், வன்முறை தொடங்கிய அடுத்த நாளான மே 4ம் தேதி மாநிலம் முழுவதும் குக்கி இன பெண்களுக்கு பல கொடூரங்கள் நடந்துள்ள தகவல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அதே நாளில் இம்பாலில் 2 பழங்குடியின இளம்பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.

அதே போல, காக்சிங் மாவட்டத்தின் செரோவ் கிராமத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரின் மனைவி இபெடோம்பி (80) என்பவர் அவரது சொந்த வீட்டுக்குள்ளேயே உயிருடன் எரித்து கொல்லப்பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது. ஆயுதமேந்திய கும்பல் ஒன்று இபெடோம்பியை உள்ளே வைத்து வெளியில் பூட்டி வீட்டிற்கு தீ வைத்துள்ளனர். அவரது கணவர் சுராசாங்சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமால் கவுரவிக்கப்பட்டவர்.

இதுபோன்ற, மே 4ம் தேதி நடந்த வன்முறையில் மட்டும் குக்கி பழங்குடியின பெண்கள் 27 பேர் குறிவைத்து கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வைபே மக்கள் மன்றம், இளைஞர் வைபே சங்கம், ஜோமி மாணவர் கூட்டமைப்பு மற்றும் குகி மாணவர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன. இந்த அமைப்பினர் அளித்த பேட்டியில், ‘‘மே 3 முதல் இன மோதல்களின் போது பாதிக்கப்பட்ட 27 பெண்களில் 7 பேர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர். 8 பேர் அடித்து கொல்லப்பட்டனர். 2 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், 3 பேர் கும்பலால் தாக்கி கொல்லப்பட்டனர், மீதமுள்ளவர்களின் இறப்புக்கான காரணங்கள் தெரியவில்லை’’ என கூறி உள்ளனர்.

டெல்லி மகளிர் ஆணைய தலைவி மணிப்பூர் பயணம்:
இதற்கிடையே, மணிப்பூர் வன்முறையில் பல பெண்கள் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் டெல்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் நேற்று மணிப்பூருக்கு புறப்பட்டார். முதலில் அவருக்கு அனுமதி அளித்த மணிப்பூர் பாஜ அரசு பின்னர் அதனை வாபஸ் பெற்றது. ஆனாலும் திட்டமிட்டப்படி மணிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு ஸ்வாதி மாலிவால் நேற்று சென்றடைந்தார். விமானநிலையத்தில் பேட்டி அளித்த அவர், நேராக முதல்வர் அலுவலகத்திற்கு செல்ல இருப்பதாகவும், வரும் 30ம் தேதி வரை மணிப்பூரில் தங்கி இருந்து, பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

* பிரதமர் மோடியைவிமர்சித்த பாஜ எம்எல்ஏ
மணிப்பூர் விவகாரத்தை முற்றிலும் தவறாக கையாண்டிருப்பதாக பிரதமர் மோடியை குக்கி இனத்தை சேர்ந்த பாஜ எம்எல்ஏவான பாவோலியன்லால் ஹொக்கிப் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்திற்கு முக்கியத்துவம் தராமல் அமெரிக்கா பயணத்திற்கு முன்னுரிமை கொடுத்து தவறு செய்து விட்டார். அவரது பயணத்திற்கு முன்பாக பலமுறை சந்திக்க முயற்சி செய்தோம்.

ஆனால் இப்போது வரையிலும் பிரதமர் மோடியை எங்களால் சந்தித்து முறையிட முடியவில்லை. ஒரு வாரம் தள்ளிப்போடுவதே மிகப்பெரிய தாமதமாகும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பேச 79 நாட்கள் ஆனது. மெய்தி போராளி குழுக்கள், போலீஸ் கமாண்டோக்களுடன் இணைந்து நடத்திய தாக்குதல்களே இந்த வன்முறைக்கு 99 சதவீதம் காரணம்’’ என்றார்.

* மிசோரமிலும் வன்முறை பரவும் அபாயம்

மணிப்பூரிலிருந்து பயங்கரமான தகவல்கள் தினம் தினம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் மெய்டீஸ் இனத்தவர்கள் காரணம் என்பதால், அண்டை மாநிலங்களில் வாழும் மெய்டீஸ் இனத்தவர்களுக்கு கடுமையான பாதுகாப்பு பிரச்னை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அண்டை மாநிலமான மிசோரமில் உள்ள பாம்ரா எனும் முன்னாள் போராளிகள் அமைப்பு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், ‘மணிப்பூர் வன்முறையை தொடர்ந்து மிசோரமில் நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளது. மணிப்பூரை சேர்ந்த மெய்டீஸ் இன மக்கள் இனிமேல் மிசோரமில் பாதுகாப்பாக வசிக்க முடியாது. எனவே மெய்டீஸ் மக்கள் தங்களது பாதுகாப்பு கருதி மீண்டும் மணிப்பூருக்கே திரும்பி செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்றது.

இதைத் தொடர்ந்து, மிசோரமிலும் பல பகுதிகளில் உள்ள 1,500 குடும்பங்களை சேர்ந்த மெய்டீஸ் மக்களில் பலர் ரயில், பஸ் மூலமாக தலைநகர் அய்ஸ்வாலுக்கு வந்துள்ளனர். அவர்களில் 41 பேர் நேற்று அசாம் சென்றடைந்தனர். அதே சமயம், உள்ளூர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மெய்டீஸ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திருப்பதாக மிசோரம் மாநில அரசு தெரிவித்துள்ளது. அரசின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மிசோரம் உள்ளூர் அமைப்புகள் மெய்டீஸ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையை கைவிட்டுள்ளதாகவும், அவர்கள் அமைதியாக வாழ அனுமதிப்பதாகவும் உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே மணிப்பூரின் பாதிப்பு மிசோரமிலும் பதற்றத்தை உருவாக்கத் தொடங்கி உள்ளது.

The post மணிப்பூரில் கொடூரம் மேலும் 7 பேர் கூட்டு பலாத்காரம்: இரண்டு பெண்கள் எரித்துக் கொலை அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: