பல்வேறு நோய்களில் இருந்து குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளை காக்க சென்னையில் 3 தவணைகளாக இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம்: மேயர் பிரியா தகவல்

சென்னை, ஜூலை 23: பல்வேறு நோய்களில் இருந்து குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளை காக்கும் வகையில், சென்னையில் 3 தவணைகளாக இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது, என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற உள்ள தீவிர மிஷன் இந்திர தனுஷ் 5.0 தடுப்பூசி முகாம் தொடர்பான மாவட்ட பணிக்குழு கூட்டம், மேயர் பிரியா தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகை வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில், மேயர் பிரியா தீவிர மிஷன் இந்திர தனுஷ் 5.0 தடுப்பூசி செயல்பாட்டு வழிமுறை கையேட்டினை வெளியிட்டு பேசியதாவது: இந்தியாவில் முதன்முறையாக 2014ம் ஆண்டு இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டது. மேலும், சென்னை மாநகராட்சியில் முதல் இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம் 22.2015 முதல் 30.2015 வரை நடைபெற்றது. இதுவரை சென்னை மாநகராட்சியில் 2015ம் ஆண்டில் 5 முறை, 2016ம் ஆண்டில் 2 முறை மற்றும் 2022ம் ஆண்டில் ஒரு முறை என மொத்தம் 8 முறை இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் ஆகிய இடங்களில் மூன்று தவணைகளில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

முதல் தவணை 7.8.2023 முதல் 12.8.2023 வரையும், இரண்டாம் தவணை 11.9.2023 முதல் 16.9.2023 வரையும், மூன்றாம் தவணை 9.10.2023 முதல் 14.10.2023 வரையும் நடைபெற உள்ளது. சென்னை மாநகரில் இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம்கள் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் ஆகிய இடங்களில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாம்களில் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் பணிபுரிவர்.

இந்த முகாம்கள் நடைபெறுவதற்கு முன்னதாக விடுபட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் அந்த நாட்களில் தடுப்பூசிக்கு தகுதியான குழந்தைகள் ஆகியோரை கணக்கிடும் பணி 18.7.2023 முதல் நடைபெற்று வருகிறது. முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அனைத்து 0-2 வயதிற்குட்பட்ட விடுபட்ட குழந்தைகள், 2-5 வயதுள்ள விடுபட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி முகாம் நாட்களில் தடுப்பூசி மருந்து கொடுக்கப்படும்.

மேலும், இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நடைபெறும் நாட்களில் அவரவர்கள் வசிக்கும் இடத்திலேயே தடுப்பூசி போடப்படும். இந்த தடுப்பூசி செலுத்துவதன் மூலம் காசநோய், போலியோ, மஞ்சள் காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, நிமோனியா காய்ச்சல், தட்டம்மை மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களிலிருந்து குழந்தைகளை காக்க முடியும். எனவே, சென்னை மாநகராட்சிக்குட்ட பகுதிகளில் உள்ள தாய்மார்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் பல்வேறு நோய்களிலிருந்து குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், மாநகர நல அலுவலர் ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் பானுமதி, இணை இயக்குநர் (நோய்தடுப்பு) வினய், கண்காணிப்பு மருத்துவ அலுவலர் (உலக சுகாதார அமைப்பு) சுரேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் திட்ட இயக்குநர் ஜெய, ஸ்டான்லி மருத்துவமணை முதல்வர் பாலாஜி, கூடுதல் மாநகர நல அலுவலர்கள், கூடுதல் மாநகர மருத்துவ அலுவலர்கள். மண்டல மருத்துவ அலுவலர்கள், மண்டல நல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

* தடுப்பூசி செலுத்துவதன் மூலம் காசநோய், போலியோ, மஞ்சள் காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, நிமோனியா காய்ச்சல், தட்டம்மை மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களிலிருந்து குழந்தைகளை காக்க முடியும்.
* முகாம்கள் நடைபெறுவதற்கு முன்னதாக விடுபட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் அந்த நாட்களில் தடுப்பூசிக்கு தகுதியான குழந்தைகள் ஆகியோரை கணக்கிடும் பணி 18.7.2023 முதல் நடைபெற்று வருகிறது.
* முதல் தவணை 7.8.2023 முதல் 12.8.2023 2ம் தவணை 11.9.2023 முதல் 16.9.2023 3ம் தவணை 9.10.2023 முதல் 14.10.2023 வரை நடைபெற உள்ளது.

The post பல்வேறு நோய்களில் இருந்து குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளை காக்க சென்னையில் 3 தவணைகளாக இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம்: மேயர் பிரியா தகவல் appeared first on Dinakaran.

Related Stories: