கரூர் அருகே காந்திகிராமத்தில் புதிய உழவர் சந்தை விரைவில் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு மகிழ்ச்சியில் பொதுமக்கள்

 

கரூர், ஜூலை 20: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமத்தில் கட்டப்பட்டு வந்த புதிய உழவர் சந்தை வளாக பணிகள் முடிவடைந்து விரைவில் திறப்பு விழா காணப்பட உள்ளது. இதனால் மகிழ்ச்சியில் பொதுமக்கள் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் கரூர், வெங்கமேடு, பள்ளப்பட்டி, குளித்தலை, வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் உழவர் சந்தை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் மேலும், சில பகுதிகளில் உழவர் சந்தை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, புதிய உழவர் சந்தை காந்திகிராமத்தில் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருந்தது. காந்திகிராமத்தை சுற்றிலும் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள், பொதுமக்கள் என 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும், இந்த பகுதியை சுற்றிலும், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், சணப்பிரட்டி போன்ற பகுதிகள் உள்ளன.

இந்த பகுதியினர் அனைவரும் வந்து செல்லும் வகையில், தெற்கு காந்திகிராமம் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.60லட்சம் மதிப்பில் கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்றன. இதே சந்தை வளாகத்தில் சிறப்பு அங்காடி மையமும் கட்டப்பட்டு வந்தது. இந்த பணிகள் தற்போது கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளதால், காந்திகிராமம் பகுதியில் புதிய உழவர் சந்தை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வளாகத்திற்குள் மேலும், சில பணிகள் உள்ளதாகவும் அந்த பணிகள் முடிவடைந்து ஒரு மாத காலத்திற்குள் புதிய உழவர் சந்தை வளாகம் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய உழவர் சந்தை பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில், காந்திகிராமத்தை சுற்றிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கரூர் அருகே காந்திகிராமத்தில் புதிய உழவர் சந்தை விரைவில் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு மகிழ்ச்சியில் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Related Stories: