கல்யாண சமையல் உணவுகள்!

நன்றி குங்குமம் தோழி

வயிறார சாப்பிட்டு மனமார வாழ்த்துங்கள் என்று பெரும்பாலும் சொல்வது கல்யாண வீடுகளில்தான். எந்த ஒரு திருமண விழாவாக இருந்தாலும், மணமக்களை வாழ்த்த மணமேடை பக்கம் காத்திருப்பார்கள். அந்த மேடையை அடுத்து பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பது கல்யாண பந்தி பரிமாறப்படும் இடம். ரிசப்ஷன் சாப்பாடு, கல்யாண சாப்பாடு… இந்த உணவுகள் எப்போதும் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் விரும்புவார்கள். தங்களின் விருந்தாளிகளுக்கு உணவினை சுவையாக கொடுக்க வேண்டும் என்பதில் திருமண வீட்டில் மிகவும் கவனமாக தேர்வு செய்வார்கள். அதற்கு ஒரே காரணம் பரிமாறப்படும் உணவு சுவையாகவும் அதே சமயம் எல்லோரும் திருப்தியாக சாப்பிட வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம்.

அதே போல் ஒரு கல்யாண வீட்டில் மணமக்களை பற்றிய பேச்சை தாண்டி அந்த திருமணத்தில் உணவுகள் குறித்து பேசுவதுதான் அதிகமாக இருக்கும். என்ன புது உணவினை பரிமாறினார்கள், சுவை எப்படி இருந்தது என்று விருந்தாளிகள் ஆவி பறக்க பேசிக் கொண்டிருப்பார்கள். ஒருவரின் கல்யாணம் தனித்து தெரிய ஒரே காரணம் என்றால் அது உணவு மட்டுமே. இதற்காகவே பல புதுவிதமான உணவு வகைகளையும் தேடித்தேடி தங்களுடைய மெனுவில் சேர்த்துக்கொள்ள விரும்புகிறார்கள். அவ்வாறு மக்கள் என்னென்ன உணவுகளை விரும்புகிறார்கள். மேலும் தற்போது கல்யாண உணவுகளில் டிரெண்டாக இருப்பது என்ன என்பது குறித்து பகிர்ந்தார் கமலாம்பாள் கேட்டரிங்க் சர்வீஸ் நிறுவனர் சிவசுப்ரமணியன் அவர்கள்.

‘‘என்னோட சொந்த ஊர் திருச்சி. அங்கதான் முதன் முதலில் கமலாம்பாள் மெஸ் ஆரம்பிச்சோம். என் அப்பா தான் இந்த தொழிலை தொடங்கினாங்க. நான் பிறந்தது, படிச்சது எல்லாம் திருச்சியில்தான். நான் மெக்கானிக்கல் துறையை சேர்ந்தவன். அது சார்ந்த படிப்பினை படிச்சிட்டு நான் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். சில காலம் அங்கு வேலைப் பார்த்தாலும், இது எங்களின் குடும்ப தொழில் என்பதால் அப்பா ஆரம்பித்த மெஸ்சினை எடுத்து நடத்த ஆரம்பித்தேன்.

நான் இந்த துறைக்கு வந்த காலக்கட்டத்தில், கேட்டரிங் துறை தனியா எதுவும் கிடையாது. ஆனாலும் எனக்கு இது வருங்காலத்தில் நல்ல வளர்ச்சி அடையும் துறை என்று என் மனதில் ஒரு நம்பிக்கை இருந்தது. அதற்காகத் தான் அப்பா தொடங்கிய மெஸ்சினை விரிவுப்படுத்த கேட்டரிங் சர்வீசினை 1998ல் துவங்கினேன். 25 வருஷமா நான் கேட்டரிங் தொழிலை நடத்தி வருகிறேன். நான் ஆரம்பிச்ச போது, பலருக்கு நாங்க என்ன மாதிரியான சேவை கொடுப்போம் என்று தெரியவில்லை.

அதனாலேயே பலர் பெரியதாக ஆர்வம் காட்டவில்லை. பலரும் ஏளனமாதான் இந்த தொழிலை பார்த்தாங்க. ஆனாலும் எங்களிடம் ஏற்கனவே மெஸ் இருந்ததால், அதன் அடிப்படையில் சின்னச் சின்ன ஆர்டர்கள் வந்தது. ஓரளவிற்கு சமாளிக்கக்கூடிய நிலையில் கேட்டரிங் செயல்பட்டு வந்தது’’ என்றவர் கேட்டரிங் துறையில் பரிமாறப்படும் உணவுகளில் ஏற்பட்டு இருக்கும் மாற்றங்கள் குறித்து விவரித்தார்.

‘‘அந்த கால கட்டத்தில் கல்யாண வீடுகளில் குறிப்பாக காலை சிற்றுண்டி நேரத்தில் பெரும்பாலும் அதிகமாக பரிமாறப்படும் உணவுகள் என்றால், கேசரி, இட்லி, தோசை, பொங்கல், வடை மட்டும் தான் இருக்கும். கொஞ்சம் வசதிப் படைத்தவர்கள் பூரி கேட்பார்கள். அந்த காலத்தில் கல்யாண பந்தியில் பூரி என்பது ஆடம்பர உணவாக கருதப்பட்டது. பூரி பொறுத்தவரை பந்தி ஆரம்பித்த பிறகு தான் பொரிப்போம். அதுவே மதிய உணவு என்றால், சாப்பாடு, சாம்பார், ரசம், தயிர், மோர், ஒரு பொரியல், பாயசம், வடை இவைதான் மெனுவா இருக்கும். தேவைப்பட்டால் சிலர் காரக்குழம்பு, வத்தக்குழம்பு அல்லது மோர்குழம்பு சேர்ப்பார்கள். நாங்க ஆரம்பித்த போது எங்க ஊரின் சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் சின்னச் சின்ன நிகழ்ச்சியில் இருந்து தான் ஆர்டர் எங்களுக்கு கிடைத்தது.

காலம் மாற மாற கேட்டரிங் துறை ரொம்பவே வளர்ச்சி அடைந்துவிட்டதுன்னு சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் நம் ஊர்களில் உள்ள விதவிதமான ஓட்டல்கள். நாங்க மெஸ் வைத்திருந்தாலும், மாசம் ஒரு முறைதான் ஓட்டலில் சாப்பிடும் பழக்கம் இருந்தது. ஆனால் இப்போது வார இறுதி நாட்கள் என்றாலே ஓட்டலுக்கு போக வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் மாறிவிட்டனர். அவ்வாறு போகும் போது பலதரப்பட்ட உணவினை சுவைக்கிறார்கள். எல்லோருக்கும் பலவிதமான உணவுகள் பரிச்சயமாகிறது.

எந்த கடையில எந்த உணவு நல்லா இருக்கும்னு மனப்பாடமா சொல்றாங்க. ஏதாவது ஒரு சுவை குறைந்தாலும் அவங்க கண்டுபிடிச்சி சொல்றாங்க. அந்த மாதிரியான சூழ்நிலையில்தான் இப்போ நாம் இருக்கோம். இந்த உணவுப்பழக்கம் அப்படியே கல்யாண வீடுகள்ல பிரதிபலிக்குது. நாங்க ஆர்டர் எடுக்கும் போது பல வகையான உணவுகள் செய்வீங்களான்னுதான் முதலில் கேட்கிறாங்க. நாங்களும் அவங்களின் உணவு ரசனைக்கேற்ப பல உணவு வகைகளை செய்யவும் பழகிக் கொண்டோம்’’ என்றவர் கல்யாண வீடுகளில் என்னென்ன உணவு வகைகளை எல்லாம் தயார் செய்கிறார்கள் எனச் சொல்ல தொடங்கினார்.

‘‘ஒரு கல்யாணம் நடந்தா அங்க பொண்ணு மாப்பிள்ளையோட அலங்காரத்தை தாண்டி அதிகமா பார்க்கப்படுவது என்றால் அது உணவுதான். அதுவும் இந்த கால கட்டத்தில் சைனீஸ் உணவுகள், ரொட்டி, பனீர் பட்டர் மசாலா, சாட் உணவுகள் என பல வகைகளை மக்கள் விரும்புறாங்க. தங்களின் மகள் அல்லது மகனுடைய கல்யாணத்தில் பரிமாறப்படும் உணவுகள் தனித்தன்மையா இருக்கணும்னு விரும்புறாங்க. அதனாலேயே நம்முடைய பாரம்பரிய உணவுகளில் ஏதாவது புதுசா இருக்கான்னு கேட்கிறாங்க. நாங்களும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப புதுப்புது உணவு வகைகளை கொடுத்திட்டு இருக்கோம்.

உதாரணமாக, குல்கந்த் அல்வா, மலாய் ஜாமூன், ரஸமலாய், பாதாம் பிஸ்கெட், குடைமிளகாய் தயிர் பச்சடி, பட்டர் நாண், பனீர் குல்சா, தவா புல்கா, ஓமக்குழம்பு, மாம்பழ கேசரி, ரவா இட்லி வடகறி, நெய் வெண் பொங்கல், தினை சேமியா கிச்சடி, கறி வேப்பிலை பொடி ஊத்தாப்பம், பருப்பு போளி, இளநீர் பால் பாயசம், பல விதமான ஐஸ்கிரீம்கள் என பலவித உணவுகளை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாங்க தயார் செய்து பரிமாறி வருகிறோம்.

ஒவ்வொரு திருமணத்தின் போதும் ஒரு புது உணவினை அறிமுகம் செய்கிறோம். அதற்கு ஏற்ப எங்களின் மாஸ்டர்களும் உணவினை சுவையாக வழங்கி வருகிறார்கள். எந்த ஒரு புதுமையான உணவினை நாங்க கல்யாண பந்தியில் அறிமுகம் செய்யும் முன் நாங்க சமைத்து, சுவைத்து, அனைவருக்கும் திருப்தியாக இருந்தால் மட்டுமே அந்த உணவு எங்களின் பந்தியில் இடம் பெறும். பலர் ஐஸ்கிரீம், அல்வா, கேக், பாயசம் போன்ற உணவுகளில் வித்தியாசமாக வேண்டும் என்று கேட்கிறார்கள்.

சிலர் சிறுதானிய உணவு வகைகளையும் விரும்புறாங்க. உணவை தயார் செய்வது எவ்வளவு பெரிதோ அதே அளவிற்கு அதை பரிமாறுவதும் முக்கியம். இதில் உணவை பரிமாறுவது தான் எங்களுடைய பலம் என்று சொல்லலாம். சாப்பிட உட்காரும் ஒவ்வொருவரையும் கனிவாக பேசி அவர்களுக்கு வேண்டிய உணவு வகைகளை உடனே கொடுத்து இன்முகத்தோடு உபசரிப்போம். ஒரு ஆர்டர் எடுத்து விட்டால் அது எங்களுடைய வீட்டு நிகழ்ச்சி போல நினைத்து சமைப்பதும் உபசரிப்பதும் என எங்க மொத்த உழைப்பையும் அதில் கொடுப்போம். அந்த கூட்டு உழைப்பு தான் எங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஒரு ஆயுதமாக இன்றும் செயல்பட்டு வருகிறது’’ என்கிறார் சிவசுப்ரமணியன்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post கல்யாண சமையல் உணவுகள்! appeared first on Dinakaran.

Related Stories: