இனியும் பாஜகவின் கூற்றுகளை மக்கள் நம்பி கொண்டு இருக்க மாட்டார்கள் : அசாம் முதல்வருக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. பதிலடி

கொல்கத்தா : அசாம் முதலவர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, தனது ட்விட்டர் பயோவில் இருந்த இந்தியா என்ற நாட்டின் பெயரை பாரத் என்று மாற்றியதற்கு திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (இந்தியன் நேஷனல் டெவலப்மென்ட்டல் இன்க்ளூசிவ் அலையன்ஸ்) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது குறித்து அசாம் முதலவர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா விமர்சனம் செய்துள்ளார். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் அளித்த பெயர் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா என்ற பெயர் ஆங்கிலேய மரபுகளின் அடையாளம் என்று குறிப்பிட்டுள்ளார். காலனி ஆதிக்க மரபுகளில் இருந்து தேசத்தை விடுவிக்கப் பாடுபட வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ள பிஸ்வாஸ் சர்மா, நமது முன்னோர்கள் பாரதத்திற்காக போராடினார்கள், நாம் தொடர்ந்து பாரதத்திற்காக உழைப்போம் என்று கூறினார்.

அத்துடன் ட்விட்டர் பயோவில் தனது நாடு என்ற இடத்தில் இருந்து இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு பாரத் என்றும் பிஸ்வாஸ் சர்மா மாற்றி பதிவிட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அசாம் முதலமைச்சரின் வாதத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதிலடி அளித்துள்ளார். இந்தியாவை பாரத் என கட்டமைப்பது ஒரு வலுவற்ற வாதம் என்றும் இதற்கு மேலும் பாஜகவின் கூற்றுகளை மக்கள் நம்பி கொண்டு இருக்க மாட்டார்கள் என்றும் மொய்த்ரா கூறியுள்ளார். நாட்டில் பாஜகவின் பயணம் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

The post இனியும் பாஜகவின் கூற்றுகளை மக்கள் நம்பி கொண்டு இருக்க மாட்டார்கள் : அசாம் முதல்வருக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: