பெரம்பூர்: ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து, 2வது திருமணம் செய்து, 40 சவரனை ஏமாற்றிய வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் 2வது மனைவிக்கு கருக்கலைப்பு செய்து, சித்ரவதை செய்தது அம்பலமாகியுள்ளது. கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் பானு (27). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவருக்கு கடந்த 2019ம் ஆண்டு வியாசர்பாடி சாஸ்திரி நகர் 5வது தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் நிசார் அகமது (31) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பானுவுக்கு திருமணத்தின் போது 101 சவரன் நகை சீர்வரிசையாக தரப்பட்டது. திருமணமான சில நாட்களில், நிசார் அகமது மற்றும் அவரது தாய், தந்தை உள்ளிட்டோர், கூடுதல் வரதட்சணை கேட்டு பானுவை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், பானுவிற்கு சீர்வரிசையாக தரப்பட்ட 101 சவரனில் சுமார் 40 சவரன் நகைகளை நிசார் அகமது வாங்கி, அதனை அவர் தனது சொந்த தேவைக்காக பயன்படுத்தியுள்ளார். இந்நிலையில், நிசார் அகமது சரிவர வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பானு, இதுகுறித்து விசாரித்தபோது நிசார் அகமதுக்கு ஏற்கனவே மகாலட்சுமி என்பவருடன் திருமணமாகி, 2 குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பானு, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதன் பிறகு கொடுங்கையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு, அவர் தனது மாமியார் வீட்டுக்குச் சென்று இதுகுறித்து கேட்டபோது, கொதிக்கும் நீரை எடுத்து அவரது முகத்தில் நிசார் முகமது ஊற்றி கொடுமைப்படுத்தியுள்ளார். அதன் பிறகு மீண்டும் பானு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இதுகுறித்து சமீபத்தில் எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உதவி கமிஷனர் தமிழ்வாணன் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி இன்ஸ்பெக்டர் நசீமாவுக்கு உத்தரவிட்டிருந்தார். எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணையில், நிசார் அகமது முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்ததும், 2வது மனைவி பானு கர்ப்பமாக இருந்தபோது, இப்போது நமக்கு குழந்தை வேண்டாம் என கருக்கலைப்பு செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து நேற்று காலை நிசார் அகமதுவை கைது செய்து, அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வரதட்சனை தொடர்பான சம்பவத்தில் பானுவின் மாமனார், மாமியார் மற்றும் நிசார் அகமதுவின் முதல் மனைவி மகாலட்சுமி ஆகியோருக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post ஏற்கனவே திருமணமாகி, 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து 2வது திருமணம் செய்து 40 சவரன் ஏமாற்றிய வழக்கறிஞர் கைது: கருக்கலைப்பு செய்து துன்புறுத்தியது அம்பலம் appeared first on Dinakaran.
